டிரம்பின் டிரம்ப் ட்ரூத் சோஷியல் மீடியாவுக்கு தடையா? உக்ரைன் திட்டவட்ட மறுப்பு
கீவ்: பழிவாங்கல் நடவடிக்கையாக டிரம்பின் டிரம்ப் ட்ரூத் சோஷியல் மீடியாவுக்கு உக்ரைனில் தடை விதித்ததாக பரவிய செய்திக்கு, அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.ரஷ்யா தொடர்ந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், ரஷ்யாவுடனான உறவை புதுப்பிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், உக்ரைனை ஒதுக்குகிறார்.'ஜெலன்ஸ்கி தேர்தலை நடத்தாமல் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். தேர்தலை நடத்துவதற்கு அவர் மறுத்து வருகிறார். இதனாலேயே, அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடனுடன் சேர்ந்து, போர் நீடித்திருக்க அவர் நாடகமாடி வந்துள்ளார்' என அதிபர் டிரம்ப் கடுமையாக சாடி இருந்தார்.இந்நிலையில், பழிவாங்கல் நடவடிக்கையாக டிரம்பின் டிரம்ப் ட்ரூத் சோஷியல் மீடியாவுக்கு உக்ரைனில் தடை விதித்ததாக செய்திகள் பரவியது. இந்த தகவலை உக்ரைன் அரசு மறுத்துள்ளது. இது குறித்து, உக்ரைனின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹியோர்ஹி டைகி கூறியதாவது:உக்ரைனில் டிரம்புக்கு சொந்தமான ட்ரூத் சோஷியல் மீடியாவுக்கு தடை விதித்ததாக செய்திகள் பரவி வருவதை நாங்கள் அறிந்தோம். இது முற்றிலும் தவறானது. துரதிர்ஷ்டவசமானது. உக்ரைனில் பயனர்களுக்கு ட்ரூத் சோஷியல் மீடியாவை தடுத்து நிறுத்த முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.