மெகா ஸ்டார்ஷிப் 11வது ராக்கெட்: விண்ணில் ஏவியது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்!
டெக்சாஸ்: 11வது மெகா ஸ்டார்ஷிப் ராக்கெட்டினை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்ணில் ஏவியது. இதற்கு குழுவினருக்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் அடுத்தடுத்து ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனையை செய்து அசத்தி வருகிறது. செயற்கைக்கோள் ஏவும் செலவை குறைக்கும் முயற்சியாக ஸ்டார்ஷிப் ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்த ராக்கெட் செயற்கைக்கோளை விண்ணில் ஏவிவிட்டு கடலில் விழாமல், மீண்டும் பூமிக்கும் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ல் இருந்து இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட்டை டெஸ்ட் பிளைட் என்ற பெயரில் வரிசையாக சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், 11வது ஸ்டார்ஷிப் சோதனை ராக்கெட், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட்டில் உள்ள பூஸ்டர் எனப்படும் உந்துசக்தி சாதனம் வெற்றிகரமாக மீண்டும் ஏவுதள கோபுரத்திற்கு திரும்பியது. ஸ்டார்ஷிப்பின் ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக்கிய குழுவிற்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 10வது ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை வெற்றிகரமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.