உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிறையில் கொடூர சித்ரவதை பாக்., மாஜி பிரதமர் புகார்

சிறையில் கொடூர சித்ரவதை பாக்., மாஜி பிரதமர் புகார்

இஸ்லாமாபாத்:'என்னையும், என் மனைவியையும் சிறையில் சித்ரவதை செய்து அடிபணிய வைக்க பாகிஸ்தான் அரசு முயல்கிறது' என, அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான், பாகிஸ்தான் தெரீக் - இ - இன்சாப் கட்சியை துவங்கினார். தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டு பிரதமரானார். அப்போது வழங்கப்பட்ட பரிசு பொருட்களை திருப்பி ஒப்படைக்காதது உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கிய அவர், தற்போது ராவல்பிண்டி சிறையில் உள்ளார். அவருக்கு, 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் இம்ரான் மனைவி புஷ்ரா பீவிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் கைதிகளுக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்படும் அனைத்து அடிப்படை உரிமைகளும் தனக்கும், தன் மனைவிக்கும் நிறுத்தப்பட்டுள்ளதாக இம்ரான் கான் ஏற்கனவே புகார் தெரிவித்து இருந்தார். தனக்கு ஏதாவது நடந்தால், பாக்., ராணுவத் தளபதி அசிம் முனீர் பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சியினருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், அசிம் முனீர் குறித்து மீண்டும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் இம்ரான் கூறுகையில், 'சிறையில் என்னையும், மனைவு புஷ்ராவையும், அசிம் முனீர் மன ரீதியாக சித்ரவதை செய்கிறார். மனதளவில் எங்களை உடைத்து அடிபணிய வைக்க அவர் முயற்சிக்கிறார். உயிருடன் இருக்கும் வரை கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு முன் தலைவணங்க மாட்டோம். நாட்டில் சட்டம் ஒழுங்கை கெடுக்கவும், சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தவும், ராணுவத்தை முனீர் பயன்படுத்துகிறார்' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை