| ADDED : ஆக 31, 2025 08:10 PM
பீஜிங்: சீனாவில் பிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அது தொடர்பாக ஓர் சிறப்பு அலசல்!ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஏழு ஆண்டுகளுக்கு பின் சீனா சென்றார். சீனாவின் தியான்ஜின் நகரில் 2 நாட்கள் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டுக்கு முன்னதாக, சீனஅதிபர் ஜி ஜின்பிங்யை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு குறித்து பத்து முக்கிய தகவல்கள் பின்வருமாறு:1. 2018ம் ஆண்டுக்குப் பிறகு சீனாவில் முதல் இந்தியா-சீனா இருதரப்புப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பிரதமர் மோடியும் ஜி ஜின்பிங்கும் தியான்ஜினில் சந்தித்தனர். 2. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டிற்கு தன்னை அழைத்ததற்காக ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.3. எல்லைப் பதட்டங்களை நிர்வகிப்பது குறித்து இந்தியா மற்றும் சீன சிறப்புப் பிரதிநிதிகள் முக்கிய முடிவுகள் எடுத்ததை பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார். 4. எல்லையில் இருதரப்பு தங்களது படைகளை வாபஸ் பெற்ற பிறகு உறவுகள் மேம்பட்டு உள்ளது. எல்லையில் அமைதி நிலவுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.5. ஐந்து வருட இடைநிறுத்தத்திற்குப் பிறகு, திபெத்தில் உள்ள கைலாஷ் மலைக்கான யாத்திரை பாதை இப்போது இந்திய யாத்ரீகர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நல்லெண்ணத்தின் அடையாளமாகவும் பதட்டங்களைத் தணிப்பதற்கான முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.6. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்குகிறது. இதனால் இரு நாட்டு மக்களுக்கு இடையே வர்த்தக உறவு வலுப்பெறும்.7. கிட்டத்தட்ட 300 கோடி மக்களின் நலன் இந்தியா-சீனா ஒத்துழைப்பைச் சார்ந்துள்ளது என்பதை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். பிராந்திய அமைதி மற்றும் உலகளாவிய நல்வாழ்வுக்கு இருதரப்பு உறவுகள் மையமாக இருப்பதாக அவர் விவரித்தார்.8. எதிர்கால உறவுகள் பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் இறையாண்மை பிரச்னைகள் தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.9.இரு தரப்பினரும் ஒருவரையொருவர் அச்சுறுத்தல்களாக அல்ல, வளர்ச்சி வாய்ப்புகளாகப் பார்க்க வேண்டும் என்று சீனா அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தினார். 10. அமெரிக்காவிலிருந்து வரும் பொருளாதார அழுத்தத்தை இரு நாடுகளும் சமாளிக்கும் வேளையில், மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு நடந்துள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இப்போது டிராகனும் யானையும் விருப்பத்தின் காரணமாக மட்டுமல்ல, தேவையினாலும் உறவுகளை வலுப்படுத்துகிறது.