ஆஸி.யில் இந்தியரின் பிரபல உணவகத்தில் விஷ வாயு கசிந்து விபத்து: ஊழியர் மூச்சுத் திணறி பலி
சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்தியரின் உணவகத்தில் விஷ வாயு கசிவால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றிய விவரம் வருமாறு;ஆஸ்திரேலியாவில் வடமேற்கு சிட்னியில் ஹவேலி இந்தியன் உணவகம் செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியில் மிகவும் பிரபலமாக அறியப்படும் இந்த ஓட்டலை ரேஷம்சிங் என்ற இந்தியர் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் வழக்கம் போல் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.அப்போது, உணவகத்தில் கார்பன் மோனாக்சைடு என்ற வாயு கசிந்துள்ளது. இதை சுவாசித்த பலர் மயக்கம் அடைய அங்கு ஒருவித பதற்றம் தொற்றிக் கொண்டது. அங்கிருந்த மற்றவர்கள் அலறியபடி பீதியில் உணவகத்தை விட்டு வெளியே ஓடினர்.தகவலறிந்த உள்ளூர் போலீசாரும், மீட்புக் குழுவினரும் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். உள்ளே சென்று பார்த்த போது உணவக ஊழியர் ஒருவர் விழுந்து கிடப்பதை கண்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த 5 போலீசாரும் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். அவர்களுடன் மேலும் 2 பேர் அங்கேயே மயங்கி கிடந்தனர். உடனடியாக அவசர மருத்துவ உதவிகளுக்கான மீட்புக்குழுவினர் விரைந்து வந்து அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை மருத்துவர்கள் பரிசோதித்த போது, உணவக ஊழியர் இறந்துவிட்டார் என்பது கண்டறியப்பட்டது. எஞ்சியவர்கள் உயிருக்கு போராடியபடி இருப்பதை அறிந்து, உடனடியாக மருத்துவ கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.இதுகுறித்து, நியூ சவுத்வேல்ஸ் போலீஸ் உதவி கமிஷனர் கெவின்வுட் கூறியதாவது; இது அநேகமாக கார்பன் மோனாக்சைடு (இது ஒரு வகை வாயு. நிறமில்லாதது, வாசனையும் அற்றது) என்ற விஷ வாயுவாக இருக்கலாம். இதை சுவாசித்ததன் எதிரொலியாக அனைவரும் மூச்சுத் திணறி மயங்கி விழுந்து இருக்கின்றனர். எதனால் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது என்பது அடுத்தக்கட்ட விசாரணைகளின் முடிவுக்கு பின்னரே தெரிய வரும்.இவ்வாறு கெவின்வுட் கூறினார்.