இந்தியாவின் ராணுவ நடவடிக்கை வளைகுடா கூட்டமைப்பு ஆதரவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
துபாய்: பயங்கரவாதம் என்பது மனித குலத்துக்கு பொது எதிரி என்பதால், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடுக்கு வளைகுடா கூட்டமைப்பு நாடுகள் முழு ஆதரவு தெரிவித்துஉள்ளன.பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை அம்பலப்படுத்தவும், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் குறிக்கோள் குறித்து விளக்கவும், 33 நாடுகளுக்கு எம்.பி.,க்கள் குழுக்களை மத்திய அரசு அனுப்பியது. சந்திப்பு
வளைகுடா நாடுகளுக்கு சிவசேனா எம்.பி., ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான எம்.பி.,க்கள் குழு சென்றது. அவர்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கான இந்திய துாதர் சஞ்சய் சுதிர் வரவேற்றார். பின்னர், அந்நாடுகளின் உள்துறை, வெளியுறவு, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்தனர். 'வளைகுடா கூட்டமைப்பு கவுன்சிலில்' அங்கம் வகிக்கும் மேற்காசிய நாடுகளான பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றின் அமைச்சர்களை எம்.பி.,க்கள் குழு சந்தித்தது.அப்போது, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டுக்கு, அந்நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இது குறித்து நம் துாதர் சஞ்சய் சுதிர் நேற்று கூறியதாவது:பாக்., பயங்கரவாதிகள், கடந்த 2008ல் மும்பையில் நடத்திய தாக்குதலின்போது, வளைகுடா கூட்டமைப்பு கவுன்சில் நாடுகளின் கருத்து வேறு விதமாக இருந்தது. தற்போது, அதே கூட்டமைப்பின் கருத்து முற்றிலுமாக மாறி விட்டது. பயங்கரவாதம் என்பது மனித குலத்தின் பொது எதிரி என்பதை உணர்ந்து, அதை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஒப்புக்கொண்டனர். வலிமை
அதனால்தான், பஹல்காம் தாக்குதல் நடந்த உடனேயே, பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் அழிக்க வேண்டும் என, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கருத்து தெரிவித்தது. நம் எம்.பி.,க்கள் குழுவை அவர்கள் வரவேற்ற விதமும், எங்களுடைய நோக்கம் குறித்த அவர்களின் புரிதலும் இந்தியா--வளைகுடா நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் வலிமையை காட்டியது.இவ்வாறு அவர் கூறினார்.
அடிபணிய மாட்டோம்'
ஜப்பானுக்கு, ஐக்கிய ஜனதா தளம் எம்.பி., சஞ்சய் ஜா தலைமையில் சென்ற குழுவில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணமுல் காங்., -- எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி இடம் பெற்றுள்ளார். டோக்கியோவில் பேட்டியளித்த அவர், “பயங்கரவாதம் என்பது வெறிபிடித்த நாய் என்றால், அதை காட்டுமிராண்டித்தனமாகவும், கொடூரமாகவும் பாகிஸ்தான் கையாளுகிறது. இதை எதிர்த்துப் போராடுவதற்காக, உலகை நாம் ஒன்றிணைக்காவிட்டால், மேலும் பல வெறிபிடித்த நாய்களை இனப்பெருக்கம் செய்யும். அச்சுறுத்தலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. பயங்கரவாதிகளுக்கு, அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியிலேயே பதிலளிக்க கற்றுக் கொண்டுள்ளோம்,” என்றார்.