உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாளத்தில் கனமழைக்கு 148 பேர் பலி வெள்ளத்தில் சிக்கிய 3,100 பேர் மீட்பு

நேபாளத்தில் கனமழைக்கு 148 பேர் பலி வெள்ளத்தில் சிக்கிய 3,100 பேர் மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காத்மாண்டு, நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால், வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவும் ஏற்பட்டு பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது; 148 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு இடங்களில் சிக்கி தவித்த, 3,100 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நம் அண்டை நாடான நேபாளத்தில், சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்குகிறது. அந்நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளை, கடந்த வெள்ளி முதல் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏராளமான கட்டடங்களும், விளைநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் கனமழையால், 195 வீடுகள் மற்றும் எட்டு பாலங்கள் இடிந்துள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டு போக்குவரத்து பாதித்துள்ளது.கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழை, காத்மாண்டு பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பேரிடர் மீட்பு படையினர் ரப்பர் படகுகள், ஹெலிகாப்டர்களில் சென்று வெள்ள நீர் சூழ்ந்த வீடுகள் மற்றும் முக்கிய இடங்களில் தவிப்பவர்களை மீட்டு வருகின்றனர். இதுவரை 3,100 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பலி எண்ணிக்கை, 148 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக காத்மாண்டு பகுதியில், 48 பேரும், மற்ற பகுதிகளில், 64 பேரும் மாயமாகியுள்ளனர்; 45 பேர் காயம் அடைந்துள்ளனர். காத்மாண்டு நகரை அடுத்த தாடிங் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில், பஸ் ஒன்று மண்ணில் புதைந்தது. இதில் சென்ற, 19 பயணியரும் உயிருடன் புதைந்தனர். அதேபோல, மாக்வான்பூர் கால்பந்து பயிற்சி மையத்தில் தங்கியிருந்த ஆறு கால்பந்து வீரர்கள் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். நாளை மறுநாள் வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையே, நேற்று முன்தினம் கனமழை பெய்ய காரணம் என்று கூறப்படுகிறது. மழை காரணமாக, நாட்டின் முக்கிய நதியான பாக்மதி ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. கனமழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால், பல பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை