உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இம்ரான் கட்சியினர் முற்றுகை பாகிஸ்தானில் பதற்றம் நீடிப்பு

இம்ரான் கட்சியினர் முற்றுகை பாகிஸ்தானில் பதற்றம் நீடிப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில், ஆறு பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். தலைநகர் இஸ்லாமாபாதின் மையப் பகுதியை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு பிரதமராக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாக்., - தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான், 2022ல் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் மீது, 200க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான், 2022 முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தபடி, அரசுக்கு எதிராக நவ., 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்தார்.இதன்படி, தலைநகர் இஸ்லாமாபாதை நோக்கி இம்ரான் கான் மனைவி புஷ்ரா பீபி தலைமையில், அவரது கட்சி தொண்டர்கள் பேரணியாக சென்றனர். அவரது கட்சி வலுவாக உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் இருந்து ஏராளமான தொண்டர்கள், இஸ்லாமாபாதை நோக்கி விரைந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய பாதுகாப்புப் படையினர், முக்கிய சாலைகளில் தடுப்புகளை அமைத்திருந்தனர். பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பாதுகாப்புப் படையினரை நோக்கி போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் தடியடி நடத்தினர். இரு தரப்புக்கு இடையே நடந்த மோதல் வன்முறையாக மாறியதில், இரு போலீசார், துணை ராணுவப் படையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் நேற்று, தலைநகர் இஸ்லாமாபாதின் மையப்பகுதியான டி - சவுக் என்ற பகுதியை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்து முன்னேறிய அவர்கள், அதிபர், பிரதமர், அலுவலகங்கள் பார்லி., உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள முக்கிய பகுதியான டி - சவுக்கில் குவிந்துள்ளனர். அங்கு ஏராளமான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 'இம்ரான் கானை சிறையில் இருந்து விடுதலை செய்யும் வரை டி - சவுக்கில் இருந்து நகர மாட்டோம்' என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகரின் மையப் பகுதியை இம்ரான் கான் ஆதரவாளர்கள் சூழ்ந்துள்ளதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இம்ரான் கானை கொல்ல சதி?

அந்நாட்டு ராணுவம் - இம்ரான் கான் இடையேயான பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தம் செய்யும்படி, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அணுகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக விவாதிக்க, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு ஐ.எஸ்.ஐ., அதிகாரிகள் குழு சமீபத்தில் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. பாக்., ராணுவ தலைமை தளபதி அசிம் முனீருக்கு அந்நாட்டு மக்களிடையே அதிருப்தி நிலவுவதால், மத்தியஸ்தம் செய்ய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலில் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, இம்ரான் கானை கொல்ல பாக்., ராணுவம் திட்டம் தீட்டியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நிக்கோல்தாம்சன்
நவ 27, 2024 05:03

நீங்க இந்தியாவில் செய்து காட்டியதை மக்கள் பார்த்துக்கொண்டே இருக்கின்றனர் என்பதனை மறந்து விட்டீர்களா பாக் உளவுத்துறையினரே


J.V. Iyer
நவ 27, 2024 04:36

இதுதான் சாக்கு என்று பயங்கரவாதிகள் அகதிகள் என்ற பெயரில் ஹிந்துஸ்தானுக்கு வருவார்கள். ராணுவம் இவர்களை விரட்டி அடிக்கவேண்டும்.


சமீபத்திய செய்தி