உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  இந்தியா - பிரேசில் இடையே கடற்படை ஒப்பந்தம் கையெழுத்து

 இந்தியா - பிரேசில் இடையே கடற்படை ஒப்பந்தம் கையெழுத்து

பிரேசிலியா: இந்தியா - பிரேசில் கடற்படை மற்றும் நம் நாட்டின் கப்பல் கட்டுமான நிறுவனமான, 'மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ்' இடையே, நீர்மூழ்கி கப்பலை பராமரித்தல், பாதுகாப்பு உறவை மேம்படுத்துதல் உள்ளிட்ட முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் நட்பு நாடான பிரேசிலின் கடற்படை போர் கல்லுாரியைச் சேர்ந்த, 40 பேர் அடங்கிய குழு, கடந்த மாதம் இந்தியா வந்தது. டில்லியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில், முக்கிய அதிகாரிகளுடன் இந்த குழு ஆலோசனை நடத்தியது. அப்போது, இரு தரப்பினருக்கும் இடையிலான உறவை மேம்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நம் கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி, தென் அமெரிக்க நாடான பிரேசில் சென்றார். அந்நாட்டு கடற்படை தளபதி மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். வரவேற்பு இதன் இறுதியில், பாதுகாப்பு உறவை மேம்படுத்துதல், 'ஸ்கார்பீன்' வகை நீர்மூழ்கி கப்பலை பராமரித்தல், தளவாடங்கள் பயன்படுத்துதல், பயிற்சியில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்தல் உட்பட பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்திய கடற்படை, பிரேசில் கடற்படை, நம் நாட்டின் பிரபல கப்பல் கட்டுமான நிறுவனமான, 'மசகான் ஷிப் பில்டர்ஸ்' நிறுவனம் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும். அதேசமயம், 'ஸ்கார்பீன்' வகை நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் பிற கடற்படை தளங்களை நிலைநிறுத்துவதில் உள்ள தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும். இதுகுறித்து நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கூட்டு ராணுவ பயிற்சிகளில் பங்கேற்பது மற்றும் உயர்மட்ட பாதுகாப்பு பிரதிநிதிகளின் பரிமாற்றம் உட்பட வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை இருநாட்டு தலைவர்களும் வரவேற்றனர். ஒத்துழைப்பு 'கடற்படை சார்ந்த துறைகளில் ஆழமான ஒத்துழைப்பை செயல்படுத்துதல், தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவை வளர்க்கும் விதமாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின' என, தெரிவித்துள்ளது. கடந்த ஜூலையில், பிரேசில் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் லுாயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை சந்தித்து பேசினார். அப்போது, அடுத்த 10 ஆண்டுகளில், பாதுகாப்பு விவகாரத்தில், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ள இருவரும் முடிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, தற்போது அந்நாட்டு கடற்படையுடன் முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ