உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லண்டனில் காந்தி சிலை அவமதிப்பு வெட்கக்கேடானது: இந்தியா கண்டனம்

லண்டனில் காந்தி சிலை அவமதிப்பு வெட்கக்கேடானது: இந்தியா கண்டனம்

லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் மஹாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டு, இனவெறி வாசகங்கள் எழுதப்பட்டிருந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது. நாளை நாடு முழுதும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. காந்தி பிறந்தநாள் ஐ.நா.,வால் சர்வதேச அஹிம்சை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மஹாத்மா காந்தி, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் சட்டப்படிப்பை முடித்தார். அதனை நினைவுக்கூரும் வகையில் லண்டன் பல்கலைக்கழகத்தின் அருகே டாவிஸ்டாக் சதுக்கத்தில் காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி தினத்தில் இந்த சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். இந்தநிலையில், அங்குள்ள காந்தி சிலையை விஷமிகள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர். காந்தி, மோடி, பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டு வாசகத்தை எழுதிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்துக்கு பிரிட்டனில் உள்ள நம் நாட்டின் துாதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: லண்டனின் டாவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள மஹாத்மா காந்தி சிலையை சேதப்படுத்தியது வெட்கக்கேடான செயல். இது வெறும் நாசவேலை மட்டுமல்ல. சர்வதேச அஹிம்சை தினத்திற்கு முன்னதாக, அஹிம்சை கருத்தை வலியுறுத்திய மஹாத்மாவின் மீதான வன்முறைத் தாக்குதலாகும். இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மஹாத்மா காந்தியின் சிலையை கண்ணியத்துக்கு குறைவின்றி மீண்டும் மீட்டெடுக்க செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, எச்1பி விசாவுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதைத் தொடர்ந்து, இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய திறமைகளை மதிப்பதாகவும், இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் தாராளம் காட்டப்படும் என்றும், பிரிட்டன் அரசு அறிவித்தது.இதைத் தொடர்ந்து, இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அங்கு அதிகரித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை