அமெரிக்கா சண்டையை விலக்க சென்ற இந்தியர் சுட்டு கொலை
நியூயார்க்: அமெரிக்காவில் சண்டையை விலக்கச் சென்றபோது, ஹோட்டல் நடத்தும் இந்திய வம்சாவளி சுட்டுக் கொல்லப் பட்டார். அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் ஹோட்டல் நடத்தி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஏகபன், 51. அவரது ஹோட்டலில் தங்கியிருந்த ஒருவர், தன்னுடன் இருந்த பெண்ணுடன் சண்டை போட்டுள்ளார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்த நிலையில், அந்தப் பெண்ணை அவர் சுட்டு உள்ளார். ஹோட்டலுக்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சத்தம் கேட்டு வெளியே வந்த ராகேஷ், அந்த நபரை நெருங்கி சண்டையை நிறுத்த முயன்றுள்ளார். இந்நிலையில், அந்த நபர், துப்பாக்கியால் சுட்டதில் ராகேஷ் உயிரிழந்தார். இதற்கிடையே தோட்டா பாய்ந்து காயமடைந்த அந்த பெண், தன் குழந்தையுடன் தப்பிச் சென்றார். அவரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று விசாரணை நடந்து வருகிறது.