| ADDED : நவ 15, 2025 12:37 AM
ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, இரண்டு பேர் பலியாகினர்; 21 பேர் மாயமாகினர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், 17,000 தீவுகள் உள்ளன. இங்கு அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவமழை காலத்தில் அடிக்கடி வெள்ளம், நிலச்சரிவுகள் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது வழக்கம். மலைப்பகுதிகள் அல்லது சமவெளிப்பரப்புகளுக்கு அருகில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், இதனால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஜனவரி மாதம் பெய்த கனமழையால், மத்திய ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில், 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், கடந்த ஒருவாரமாக மீண்டும் அங்கு கனமழை கொட்டியது. இதன் காரணமாக மூன்று கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி, இரண்டு பேர் உயிரிழந்தனர், 21 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.