இஸ்ரேல் தாக்குதல்: 87 பேர் பலி
டெய்ர் அல்-பலாஹ் : வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், 87 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது; 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் புகுந்து, கடந்த ஆண்டு அக்., 7ல் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களை குறிவைத்து, இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில், வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாஹியா பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் வான் வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நேற்று அரங்கேற்றினர். இதில், அங்குள்ள பல அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் தரைமட்டமாகின. இங்கு வசித்த ஏராளமான குழந்தைகள், பெண்கள் உட்பட, 87 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை இயக்குனர் மவுனிர் அல் ப்ரூஷ் தெரிவித்துள்ளார். பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்பதால், அப்பகுதியில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதுதவிர, 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்தி வரும் தீவிர தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வகையில், வடக்கு காசாவில் உள்ள ஜாபாலியா அகதிகள் முகாமில் ஹமாஸ் பயங்கரவாதிகள் தஞ்சமடைந்து, அங்கு ஒன்றுகூடுவதாக தகவல் வெளியாகின. இதனால் அந்த முகாமை குறிவைத்து, கடந்த இரண்டு வாரங்களாக இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, இஸ்ரேல் மீது கடந்தாண்டு அக்., 7ல் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் யாஹ்யா சின்வாரை, இஸ்ரேல் ராணுவம் சமீபத்தில் கொன்றது. இதனால், காசா மீதான தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேல் அரசுக்கு, அமெரிக்கா தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.