உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி 4 இந்தியர்கள் பலியான பரிதாபம்

ஆஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி 4 இந்தியர்கள் பலியான பரிதாபம்

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் பிலிப் தீவில் உள்ள கடற்கரையில் உற்சாகமாக பொழுதை கழிக்கச் சென்ற இந்திய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் நீரில் மூழ்கி பலியாகினர். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் பிலிப் தீவு உள்ளது. இங்குள்ள கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணியர், கடலில் குளிப்பதுடன், அங்குள்ள பாறைகளின் இடுக்கில் இறங்கி அலைகளுடன் விளையாடுவது வழக்கம்.

செவிலியர்

இந்நிலையில், ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்று மெல்போர்னில் செவிலியராக பணியாற்றி வரும் இந்தியரான ஜக்ஜீத் சிங் ஆனந்த், 23, தன் உறவினர்கள் நான்கு பேருடன் நேற்று பிலிப் தீவுக்கு சென்றார். கடற்கரையில் ஜாலியாக பொழுதை கழித்த அவர்கள், அங்குள்ள பாறைகளின் நடுவில் கடல் அலை வரும் இடங்களில் இறங்கி உற்சாக கொண்டாட்டத்தில் திளைத்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களின் அலறல் மற்றும் கூக்குரலை கேட்டு நீர்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்த நபர்கள், தண்ணீரில் மூழ்கிய நால்வரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அனைவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், அது பலனளிக்காமல் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், 20 வயதுடைய இளம்பெண் உயிரிழந்தார். விசாரணையில் ஜெகஜீத் சிங்குடன் உயிரிழந்தது சுகானி ஆனந்த், 20, கீர்த்தி பேடி, 20, ரீமா காந்தி, 40, என தெரியவந்தது.

ஒரே குடும்பத்தினர்

இதில் சுகானி மற்றும் கீர்த்தி மாணவர் விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து வருவதும், அவர்களைப் பார்ப்பதற்காக இந்தியாவில் இருந்து ரீமா காந்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 'இந்த விபத்து விக்டோரியா மாகாணத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிகவும் துயரமான சம்பவம்' என ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி