இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ கூட்டு பயிற்சி துவக்கம்
வாஷிங்டன்:வரி விதிப்பு சர்ச்சைகளுக்கு மத்தியில், இந்தியா - அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சிக்காக, இந்திய ராணுவம் அலாஸ்கா சென்றுள்ளது-. இந்தியா - அமெரிக்கா இடையேயான வருடாந்திர கூட்டு ராணுவ பயிற்சி, செப்., 1 முதல் 14ம் தேதி வரை இரண்டு வாரத்துக்கு அலாஸ்காவில் நடைபெறுகிறது. 'யுத் அபியாஸ் - 2025' என்ற பெயரில் நடைபெறும், 21வது ஆண்டு கூட்டுப் பயிற்சிக்காக, நம் ராணுவம் அலாஸ்காவின் போர்ட் வைன்ரைட்டிற்கு சென்றுள்ளது. இரு நாடுகளின் ராணுவங்களுக்கிடையே உள்ள ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், இக்கூட்டுப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாக நம் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது-. ஹெலிகாப்டர் வாயிலான தாக்குதல்கள், மலை மற்றும் பாறைகள் நிறைந்த பகுதிகளில் போர் நுட்பங்கள், அதிக உயரமான பகுதிகளில் போர்க்கால சூழ்நிலை என, பல போர் பயிற்சிகளிலும் இரு ராணுவமும் ஈடுபடுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படைக்காக, ராணுவ வீரர்களின் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு களங்களில் ஏற்படும் சவால்களுக்கு தயாராக இருப்பது ஆகியவற்றை உள்ளடக்கியதே இப்பயிற்சியின் நோக்கம். இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில் இப்பயிற்சி நடைபெறுகிறது.