உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டாலர்களுக்கு கட்டுப்பாடு; மாலத்தீவில் வசிக்கும் இந்தியர்கள் திண்டாட்டம்!

டாலர்களுக்கு கட்டுப்பாடு; மாலத்தீவில் வசிக்கும் இந்தியர்கள் திண்டாட்டம்!

மாலே: அன்னியச் செலாவணி கையிருப்பு மிகவும் குறைவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மாலத்தீவு அரசு, தாயகத்துக்கு பணம் அனுப்பும் வெளிநாட்டினருக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் அங்கு பல்வேறு துறைகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள், பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.மாலத்தீவு, வருவாய்க்கு சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் குட்டி நாடு. அவ்வப்போது இந்திய அரசுடன் மோதினாலும், அண்டை நாடு என்ற ஒரே காரணத்துக்காக அந்த நாட்டுக்கு இந்தியா தேவையான உதவிகளை செய்து வருகிறது.இத்தகைய சூழ்நிலையில், அந்த நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மிகவும் குறைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், வங்கிகளில் இருந்து அமெரிக்க டாலர்களை பெறுவதற்கு அந்த நாட்டின் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.ஒருவர் மாதம் 150 டாலர் மட்டுமே அந்நியச் செலாவணியை பெற முடியும் என்ற இந்த நிபந்தனை காரணமாக, அந்த நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் தாயகத்துக்கு பணம் அனுப்ப முடியாத நிலை உருவாகும்.இந்த நிபந்தனை அக்.,25 முதல் அமலுக்கு வருகிறது. மாலத்தீவின் பள்ளிகள், கல்லுாரிகள், இதர பல்வேறு துறைகளில் இந்தியர்கள் பலர் வேலை பார்க்கின்றனர். இவர்கள், மாலத்தீவில் செயல்படும் பாரத ஸ்டேட் வங்கி கிளை மூலம் பணம் அனுப்பி வந்தனர்.தற்போது 150 டாலர் நிபந்தனையால் இவர்கள் சிரமத்தை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை ஏற்படுவதற்கு முன்னதாக, மாதம் 400 டாலர் அனுப்பலாம் என்ற நடைமுறை இருந்தது. அது மட்டுமின்றி, வெளிநாட்டு ஏடிஎம்கள் மூலம் 100 அமெரிக்க டாலர்களை எடுக்கவும் வசதி இருந்தது.புதிய கட்டுப்பாடுகளின்படி, வெளிநாட்டு கரன்சிகளை ஏடிஎம் மூலம் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சிக்கல், வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருக்கும் முக்கிய துறைகளை பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், சட்ட விரோத வழிகளில் பணம் அனுப்பும் நடைமுறைகளும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ