ஆஸ்திரேலியர்களின் பேஸ்புக் தகவல்கள் கசிவு ரூ.288 கோடி இழப்பீடு தருகிறது மெட்டா
சிட்னி: ' பேஸ்புக்' சமூக வலைதள பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கசியவிட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளான ' மெட்டா' நிறுவனம், பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களுக்கு இழப்பீடாக 288 கோடி ரூபாய் வழங்க உள்ளது. இதற்காக, 3.11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2010ல் உலகம் முழுதும் 8.70 கோடிக்கும் மேற்பட்ட தனிமனிதர்களின் தரவுகளை, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ' கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா' என்ற தகவல் பகுப்பாய்வு நிறுவனத்திற்கு பகிர்ந்ததாக சமூக வலைதளமான பேஸ்புக் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய பயனர்களின் தரவுகளை பகிர்ந்ததால் அந்நாட்டு அரசு, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான 'மெட்டா'விடம் இழப்பீடு வழங்கும்படி கோரியது. இதை ஏற்று, மெட்டா நிறுவனம், 288 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. இழப்பீடு கோரும் பயனர்களுக்கு சி ல கட்டுப்பாடுகளை அந்நிறுவனம் விதித்துள்ளது. இதன்படி, 2013 நவ., 2ம் தேதி முதல் 2015 டிச., 17ம் தேதி வரை பேஸ்புக் பயனராக இருந்திருக்க வேண்டும். அக்காலக்கட்டத்தில் 30 நாட்களுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, ஆஸ்திரேலிய அரசின் தகவல் கமிஷனர் அளித்த விபரங்களின்படி, 53 பயனர்களின் தகவல்கள் மட்டுமே கசிந்ததாக கூறப்பட்டது. ஆனால், பேஸ்புக்கில் அவர்களின் நண்பர்களாக இருந்த 3.11 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள், தங்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளதாக கூறி, இழப்பீடு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஜூன் 30ம் தேதி முதல் இழப்பீடு கோர வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், இதற்கான காலக்கெடு, வரும் டிச., 31ல் முடிகிறது. எனினும், விண்ணப்பித்த அனைவருக்கும் இழப்பீடு தொகை கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இழப்பீடு கோரிய நபர்களின் தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்திய பின்பே, எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பது தெரிவிக்கப்படும் எனவும், இத்தொகை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.