| ADDED : மே 15, 2025 01:29 PM
ஜலிஸ்கோ: மெக்சிகோவில் டிக்டாக் நேரலையின் போது மாடல் அழகி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜலிஸ்கோ மாநிலத்தில் உள்ள ஜபோபான் எனும் பகுதியில் பியூட்டி சலூனில் பணியாற்றி வந்தவர் வலேரியா மார்க்வெஸ். 23 வயதான இவர், டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் 2 லட்சம் பாலோவர்ஸ்களுடன், சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானவராக திகழ்ந்து வந்துள்ளார். தான் செய்யும் மேக்கப் பணி குறித்த வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். அவ்வப்போது, நேரலையில் தனது பாலோயர்களுடனும் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில், வலேரியா மார்க்வெஸ் தான் பணியாற்றும் சலூனில் இருந்து, டிக்டாக் நேரலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர், வலேரியாவை சரமாரியாக சுட்டுக்கொன்றுள்ளார். இது டிக் டாக் நேரலையில் அப்படியே ஒளிபரப்பானது. இதனைக் கண்ட அவரது பாலோவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அவரது செல்போனை எடுத்த நபர், தனது முகத்தை நேரலையில் காட்டியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பாலின வன்முறை காரணமாக இந்தக் கொலை அரங்கேற்றி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். லத்தீன் அமெரிக்கா நாடுகளில் பெண்கள் மீது பாலினத்தின் அடிப்படையில் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது.மெக்சிகோவில் உள்ள 32 மாநிலங்களில், அதிக கொலைகள் நடக்கும் மாநிலங்களில் ஜலிஸ்கோ 6வது இடத்தில் உள்ளது. ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் பதவியேற்றதிலிருந்து கடந்த 2024ம் ஆண்டு முதல் 906 கொலைகள் நடந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.