UPDATED : செப் 03, 2025 04:28 PM | ADDED : செப் 03, 2025 08:47 AM
மாஸ்கோ: இந்தியாவுக்கு கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு கவச அமைப்புகளை வழங்க பேச்சு நடத்தி வருவதாக ரஷ்யா கூறி இருக்கிறது. எஸ் 400 என்பது ரஷ்யா உருவாக்கிய வான் பாதுகாப்பு கவச அமைப்பு ஆகும். அதிநவீன தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட இந்த கவச அமைப்பு, உலகின் முதன்மையான வான் பாதுகாப்பு ஆயுதமாக பார்க்கப்படுகிறது.இந்த கவச அமைப்புக்கு இந்தியா சுதர்சன சக்கரம் என்று பெயர் சூட்டியுள்ளது.அண்மையில், பஹல்காம் சம்பவத்தைத் தொடர்ந்து, பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.இதை எதிர்த்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை தாக்குதல், ட்ரோன் தாக்குதல்களை எஸ் 400 வான் பாதுகாப்பு கவச அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது.வான்வெளியில் 600 கிமீ தொலைவில் இருந்து வரும் எதிரி ஏவுகணையை 400 கிமீ தூரம் வரை வானில் இடைமறித்து தாக்கும் திறன் கொண்டது இந்த கவச அமைப்பு.இந்தியா ஏற்கனவே 5 எண்ணிக்கையிலான எஸ் 400 கவச அமைப்புகளை வாங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி 3 எண்ணிக்கை எஸ் 400 கவச அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு விட்டன.உக்ரைன் போர் காரணமாக மீதமுள்ள இரண்டு எஸ் 400 கவச அமைப்புகளை இந்தியாவுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து கூடுதலான எஸ் 400 கவச அமைப்புகளை வாங்க இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது.இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரஷ்யா ராணுவ பாதுகாப்பு தொழில்நுட்ப தலைவர் டிமிட்ரி ஷூகாயேவ் கூறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஏற்கனவே எஸ் 400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இந்தியா வாங்கி இருக்கிறது. தற்போது புதிய வினியோகங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்றார்.முன்னதாக, இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் ரஷ்யா முன்னணியில் உள்ளது, 2020 -2024ம் ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 36 சதவீதம் என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் குறிப்பிட்டு இருந்தது, கவனிக்கத்தக்கது.
கூடுதல் சலுகை
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்திய நிறுவனங்கள் நிறுத்தவில்லை. சமீபத்தில் சீனா சென்றிருந்த பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசியிருந்தார்.
இந்நிலையில், இந்தியாவுக்கு இன்னும் சலுகை காட்ட அளிக்க ரஷ்யா முன்வந்துள்ளது. இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு கூடுதலாக 3 முதல் 4 அமெரிக்க டாலர் விலையை குறைக்க அந்நாடு முடிவு செய்துள்ளது.