பாக்., ராணுவத் தளபதியாக முனிர் மேலும் 10 ஆண்டு தொடர திட்டம்?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ராணுவத் தளபதியாக உள்ள பீல்டு மார்ஷல் அசிம் முனிர், மேலும் 10 ஆண்டு அதே பதவியில் தொடரும் வகையில், சட்டத் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நம் அண்டை நாடான பாகிஸ்தானில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தாலும், எப்போதும் ராணுவத்தின் தயவிலேயே இருக்கும் நிலை தொடர்கதையாக உள்ளது. தற்போதும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசும், ராணுவத் தளபதி அசிம் முனிரை நம்பியே உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவை முனிர் பெற்றுள்ளது இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று. கடந்த 2022ல் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட முனிரின் பதவிக்காலம், வரும், நவ., 28ல் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், நீண்டகால அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், உயர்நிலை சிவில் மற்றும் ராணுவத் தலைவர்களின் பதவிகாலத்தை, 10 ஆண்டுகளுக்கு நீடிக்க, பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, பாகிஸ்தானின் முர்ரியில் உள்ள ஷெபாஸ் ஷெரீப்பின் மூத்த சகோதரரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப்பின் பண்ணை வீட்டில் சமீபத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நவாஸ் ஷெரீப்பின் மகளும் பஞ்சாப் முதல்வருமான மரியம் நவாஸ், ராணுவத் தளபதி அசிம் முனிர் மற்றும் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் இயக்குநர் அசிம் மாலிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக அமெரிக்கா, சீனா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து வரும் முதலீடுகளை பெற, நிலையான அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழல் அவசியம். இதற்காக, சிவில் மற்றும் ராணுவ தலைமைகளின் பதவி காலத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பாகிஸ்தானின் ராணுவச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து, முதற்கட்டமாக, 5 ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, கூறப்படுகிறது.