சொந்த மக்கள் மீது ராணுவம் குண்டுவீச்சு மியான்மரில் 40 பேர் பலி; 50 பேர் காயம்
நைப்பியிதோ:மியான்மர் நாட்டில் புத்த மத பண்டிகை கொண்டாட்டத்தின் இடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, அந்நாட்டு ராணுவம் குண்டுகள் வீசியதில் 40 பேர் பலியாகினர்; 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். வீட்டுச் சிறை தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், 20215ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, ஜன நாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டார். அவர் உட்பட ஏராளமான ஆளுங்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டுள்ளனர். இதனால், ராணுவ ஆட்சிக்கு எதிராக அவ்வப்போது மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சாங் யு நகரத்தில் 100 பேர் புத்த மதத்தின் தாடிங்யுட் பண்டிகையை கொண்டாட கூடியிருந்தனர். அப்போது, சிலர் மெழுகுவர்த்தி ஏந்தி அரசுக்கு எதிராக போராடினர். மியான்மர் ராணுவத்தின் கட்டாய ராணுவ சேவை நடைமுறைகள் மற்றும் வரவிருக்கும் தேர்தலுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்; அதே நேரத்தில் ஆங் சான் சூச்சி மற்றும் பிற அரசியல் தலைவர்களை விடுவிக்கவும் கோரினர். அப்போது, மோட்டார் பொருத்திய பாராகிளைடர் மூலம் ராணுவத்தினர் இரண்டு குண்டுகளை வீசினர். கண்டனம் இதில், குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர்; 50க்கும் மேற் பட்டோர் காயம் அடைந்தனர். பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு துண்டு துண்டாக கிடந்தன. குண்டு வீசப் போகும் தகவல் முன்கூட்டியே கிடைத்ததால், சிலர் கலைந்து சென்றதால் உயிர் சேதம் குறைந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். சொந்த நாட்டு மக்கள் என்றும் பாராமல் குண்டு வீசிக் கொன்ற ராணுவத்தின் செயலுக்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.