| ADDED : அக் 14, 2025 06:11 AM
நியூயார்க்; அமெரிக்காவில், செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த இந்திய வம்சாவளி விடுதலை செய்யப்பட்டார். ஆனால், உடனேயே மீண்டும் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய வம்சாவளியான சுப்ரமண்யம் என்ற, சுபு வேதம், 64, கொலை வழக்கு ஒன்றில், 1980ல் கைது செய்யப்பட்டார். இவர், ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோதே பெற்றோர் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். கடந்த 1980ல், தாமஸ் கின்சர் என்பவர் கொலை வழக்கில் தவறாக குற்றவாளியாக்கப்பட்ட சுப்ரமண்யம், 43 ஆண்டுகளாக பென்சில்வேனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், முக்கிய ஆதாரங்களை மறைத்ததாக வழக்கறிஞர்களை குற்றஞ்சாட்டி, கடந்த ஆகஸ்ட் மாதம், சுப்ரமண்யத்தின் தண்டனையை ரத்து செய்தது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், 1980ல் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி, அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். சுப்ரமண்யம் தொடர் குற்றவாளி எனக்கூறி, அவரை நாடு கடத்த குடியேற்றத் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவருக்கு இந்தியாவில் எந்த தொடர்பும், உறவினர்களும் இல்லை என்று கூறி, குடும்பத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.