| ADDED : நவ 07, 2025 08:23 AM
நியூயார்க்: அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதால் நாட்டின் முக்கிய 40 விமான நிலையங்களில், விமானங்கள் சேவையை 10 சதவீதம் குறைப்பதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், முந்தைய அதிபர் ஜோ பைடன் அரசின் பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் மாற்றி அமைத்து வருகிறார். இதனால், அமெரிக்க பார்லிமென்டில் டிரம்ப் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், அரசு துறைகளுக்கான நிதியை விடுவிக்க பார்லிமென்டின் ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிதி முடக்கத்தால், 6.70 லட்சம் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளனர். அதே நேரத்தில், 7.30 லட்சம் பேர் ஊதியமின்றி பணிபுரிந்து வருகின்றனர்.இதனால், அரசின் முக்கிய துறைகள் அனைத்தும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதில் விமான போக்குவரத்து துறையும் ஒன்று. நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், அட்லான்டா என முக்கிய விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களிலும், 50 சதவீத ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையால் விமான தாமதங்கள், ரத்து போன்ற அசவுகரியங்கள் பெருமளவில் ஏற்படுகின்றன.இதனால் பயணியர் பாதிக்கப்படுவதை தடுக்கவும், பாதுகாப்பு நடவடிக்கையாகவும், 40 முக்கிய விமான நிலையங்களில், 10 சதவீதம் விமான சேவைகளை குறைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.