வாஷிங்டன் : உலகின் மிக அதிக சக்தி வாய்ந்த மனிதர் என்று கூறப்படும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.டிரம்ப் ஒன்றும் கணிதம், இலக்கியம், அறிவியல் போன்ற ஏதேனும் ஒரு துறையின் நிபுணர் அல்ல. உலகம் மேம்படுவதற்காக எதையும் கண்டுபிடித்த விஞ்ஞானியும் அல்ல. ஆனாலும், அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கான தகுதி, வேறு எவரை காட்டிலும் தனக்கே இருப்பதாக அவர் நம்புகிறார்.டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்று, நோபல் கமிட்டிக்கு சிபாரிசு செய்து, அவருடைய ஆசைக்கு துாபம் போட்டுள்ள லேட்டஸ்ட் பார்ட்டி, பாகிஸ்தான் அரசாங்கம். கடும் கோபம்
இதுவரை டிரம்பின் நெருக்கமான ஆதரவாளர்களும், அவருடைய அமைச்சர்களில் சிலரும் தான், டிரம்பை நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று சொல்லி வந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி அசிம் முனிர் வெறும் பேச்சோடு நில்லாமல், பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வமான சிபாரிசாக மாற்றியிருக்கிறார்.இந்த அசிம் முனிர் தான், பஹல்காமில் ஹிந்து ஆண்களை தேர்ந்தெடுத்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்ல திட்டம் வகுத்துக் கொடுத்த கயவன். பாகிஸ்தானில் எப்போதுமே ராணுவத்தின் தயவில் தான் அரசாங்கம் செயல்பட்டு வந்திருக்கிறது. எந்த கட்சி அங்கே ஆட்சிக்கு வந்தாலும், ராணுவத்தின் விருப்பத்துக்கு உட்பட்டே இயங்க முடியும். அந்த வகையில், இந்தியாவை சீண்டி விட்டு, போருக்கு இழுக்க காரணமாக இருந்ததே அசிம் முனிர் தான் என்பதால், அவர் மீது இந்தியா கடும் கோபத்தில் இருந்தது. ஆப்பரேஷன் சிந்துார் வாயிலாக இந்தியா நடத்திய தாக்குதல், அசிம் முனிர் மீதான கோபத்தின் வெளிப்பாடு என்றே சொல்லலாம்.ஆனால், அவரை மீறி பாகிஸ்தான் அரசு செயல்பட இயலாத சூழல் நிலவுவதால், இந்தியாவால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு விழுந்த பலத்த அடியை பொருட்படுத்தாமல், அசிம் முனிருக்கு பீல்டு மார்ஷல் என்கிற உயர் பதவியை வழங்கியது அந்நாட்டு அரசு. போலி சித்திரம் ஒன்றை பாகிஸ்தான் அதிபருக்கு அவர் வழங்கும் காட்சி சமூக ஊடகத்தில் வெளியாகி, உலகமே சிரித்ததில் இருந்து, அரசு மீது அவருக்கு இருக்கும் அதிகாரத்தை புரிந்து கொள்ளலாம். விருந்து
அந்த ஆசாமியை அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்து கொடுத்தார் டிரம்ப். கனடாவில் நடந்த, 'ஜி-7' மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறி, வெள்ளை மாளிகைக்கு திரும்பி, இந்த விருந்தை கொடுத்திருக்கிறார் டிரம்ப். அவரும் லேசுப்பட்ட ஆளா என்ன? அதே விருந்தில் நம் பிரதமர் மோடியையும் உட்கார வைக்க திட்டமிட்டு, கனடாவில் இருந்து கிளம்பு முன் அழைப்பும் விடுத்தார். நல்லவேளை, நம் உளவு படைக்கு டிரம்பின் திட்டம் கசிந்து இருந்ததால், அமெரிக்க அதிபரின் வலையில் விழாமல் தப்பினார் மோடி. ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால், உங்கள் அழைப்பை ஏற்று வாஷிங்டனுக்கு வர இயலவில்லை; ஸாரி, என்று போனில் சொல்லிவிட்டார். பெரிய ஏமாற்றம்
தப்பித்தவறி மோடி அங்கு போயிருந்தால், இந்திய பிரதமரையும், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியையும் தன் இரு பக்கமும் நிற்கவைத்து போட்டோ எடுத்து, இந்தியா - -பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்ற பொய்யை உண்மையாக்கி இருப்பார் டிரம்ப். அப்படி நடக்காதது அவருக்கு பெரிய ஏமாற்றம். ஆனால், இந்தியா - -பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் உங்கள் பங்களிப்பு ஒன்றுமே இல்லை என, முகத்துக்கு நேராக மோடி சொன்ன பிறகும், அந்த விஷயத்தில் உண்மையை ஏற்றுக் கொள்ள டிரம்புக்கு மனமில்லை. அதைத்தான் நேற்று அவர் வெளியிட்ட நீண்ட அறிக்கை பிரதிபலிக்கிறது. இந்தியா - -பாகிஸ்தான் போரை நான் நிறுத்தியதற்காக, எனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்; நோபல் பரிசு
ஆனால் கொடுக்க மாட்டார்கள் என்று டிரம்ப் கூறியிருக்கிறார். உலகின் வேறு சில இடங்களில் நடந்த போர் நிறுத்தங்களுக்கு டிரம்ப் உரிமை கொண்டாடுகிறார். அதில் எல்லாம் கூட ஓரளவு உண்மை இருக்கக் கூடும். ஆனால், இந்தியா- - பாக்., போரை பொறுத்தவரை, அவருக்கு எந்த பங்கும் போர் நிறுத்தத்தில் இல்லை என்பதை சுட்டிக் காட்டிய பிறகும், டிரம்ப் விடாப்பிடியாக அதை குறிப்பிடுவது, அவருடைய மன நிலை எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. முந்தைய அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் அதிபரான சில மாதங்களிலேயே வழங்கப்பட்டது. உண்மையில் அந்தளவுக்கு உலக அமைதிக்காக ஒபாமா எதுவும் சாதித்துவிடவில்லை. அப்போது டிரம்ப் சொன்னார், 'தனக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்பட்டது என்று ஒபாமாவுக்கே தெரியாது. அவர் திகைத்து நிற்கிறார். இந்த ஒரே விஷயத்தில் தான் நான் ஒபாமாவுடன் உடன்படுகிறேன்' என்று. அதிலிருந்தே டிரம்புக்கு நோபல் மீது அவ்வளவு மோகம். ஒன்றுமில்லாத ஒபாமாவுக்கே கொடுத்தவர்கள், ஏதோ சில போர்கள் நிற்பதற்கு காரணமான எனக்கு கொடுத்தால் என்னவாம்? என்பதே அவருடைய ஆதங்கம். 'என் பெயர் மட்டும் ஒபாமா என்று இருந்தால், முன்பே கொடுத்திருப்பார்கள' என்றார். இது, அப்பட்டமான அவதுாறு என்று சொல்லலாம். நோபல் பரிசுக்கான ஆட்களை தேர்வு செய்யும் கமிட்டி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது இல்லை என்றாலும், டிரம்ப் மறைமுகமாக சுட்டிக் காட்டுவது போல, இனம் நிறம் மொழி பார்த்து தேர்வு செய்யும் அளவுக்கு மட்டமானது அல்ல. எனினும், நோபல் கிடைக்கவில்லையே என்கிற டிரம்பின் ஆதங்கம், நோபல் பரிசை அமெரிக்கா அங்கீகரிக்காது என்று அறிவிக்கும் நிலைக்கு டிரம்பை தள்ளிவிடுமோ என்று விமர்சகர்கள் கவலைப்படுகிறார்கள். டிரம்பின் ஆதரவாளர்கள் அசரவில்லை. 'நோபலை விட பெரிய பரிசு இது தான்' என்று ஒரு விருதை நிறுவி, அதை தனக்கு வழங்கிக் கொள்ளும் ஆற்றல் டிரம்புக்கு உண்டு என்கின்றனர் அவர்கள்.