உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தான் முழுதும் பரவுகிறது ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்

பாகிஸ்தான் முழுதும் பரவுகிறது ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 12 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே இந்தப் போராட்டம் நாடு முழுதும் பரவியுள்ளது. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மருத்துவம், கல்வி, உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது உட்பட 38 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2lyjs8x6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆக்கிரமிப்பு காஷ் மீரின் தலைநகர் முசாபராபாதில், அவாமி அதிரடி குழு என்ற அமைப்பின் தலைமையில் இந்த போராட்டம் துவங்கியது. இதையடுத்து முசாபராபாத், தத்யா, ரவாலாகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி பகுதிகளில் ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். பேரணி மற்றும் போராட்டத்தைத் தடுக்க போலீசார் ஏற்படுத்திய தடைகளைத் தாண்டி மக்கள் பேரணி சென்றனர். இதனால் போராட்டக்காரர்களை கலைக்க பாக்., ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இவற்றில், 12 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று போலீசார் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த போராட்டம், நாடு முழுதும் பல இடங்களுக்கு பரவியுள்ளது. பாக்., அரசு சொந்த நாட்டு மக்களையே வேட்டையாடுவதாகக் கூறி, கராச்சியில் நுாற்றுக் கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமாபாதில் வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அங்குள்ள பிரஸ் கிளப் அருகே அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். மேலும், பிரஸ் கிளப்பில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.

அடக்குமுறையே காரணம்: மத்திய அரசு கண்டனம்

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராடுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து நம் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பாக்., ஆக்கி ரமிப்பு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதி. அதை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதுடன், அங்குள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை பாகிஸ்தான் அரசு செய்யாமல் புறக்கணித்து வந்துள்ளது. இதற்கு அந்த நாட்டை பொறுப்பாக்க வேண்டும். தற்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல இடங்களில் போராட்டம் நடந்து வருவதையும், அதில் அந்நாட்டு அதிகாரிகள் காட்டும் கொடூரம் குறித்தும் எங்களுக்கு தகவல் வருகின்றன. சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து வளங்களை கொள்ளையடிப்பதும், பாகிஸ்தான் அரசின் அடக்குமுறை, அணுகு முறையுமே இதற்கு காரணம் என நாங்கள் நம்புகிறோம். அங்கு நடக்கும் கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கு, பாகிஸ்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 04, 2025 10:52

எவ்வளவு நாட்கள்தான் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று சொல்லிக்கொண்டிருப்போம். அந்த இடத்தை மீட்டு இந்தியாவுடன் சேர்க்க மீண்டும் ஒரு Surgical Strike or Operation Sindoor Part 2 நடத்தவேண்டும். காலம் தாமதிக்காதீர்கள்.


முக்கிய வீடியோ