இலங்கையில் ஊராட்சி தலைவர் சுட்டு கொலை பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி
கொழும்பு: இலங்கையில் எதிர்க்கட்சி ஊராட்சித் தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து, எதிர்க்கட்சியினர் பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டனர். நம் அண்டை நாடான இலங்கையில், சமகி ஜன பலவேகய எனப்படும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. இலங்கை தெற்கு மாத்தறை மாவட்டத்தில் கடலோர நகரமான வெலிகம ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர், எதிர்க்கட்சியைச் சேர்ந்த லசந்த விக்ரமசேகர, 38. இவர் நேற்று முன்தினம் ஊராட்சி அலுவலகத்தில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், விக்ரமசேகரவை சரமாரியாக சுட்டுக் கொன்றுவிட்டு, தப்பியோடிவிட்டார். கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர். இது, அதிபர் அனுர குமார திசநாயகே தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த ஓராண்டில் நடந்த முதல் அரசியல் படுகொலை. இந்த சம்பவத்தைக் கண்டித்து இலங்கை பார்லிமென்ட்டில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.,க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்தனர்.