பஹல்காம் தாக்குதல்: ஈரான் அதிபர் கண்டனம்
டெஹ்ரான் : பஹல்காம் தாக்குதலுக்கு, கடும் கண்டனம் தெரிவித்த ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, 'பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் துணை நிற்போம்' என, உறுதியளித்தார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தொலைபேசி வழியாக நேற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இதுபோன்ற மனிதாபிமானமற்ற பயங்கரவாத செயல்களை ஈரான் திட்டவட்டமாக கண்டிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு எந்த நியாயமும் இருக்க முடியாது. மனிதநேயத்தில் நம்பிக்கை உடைய அனைவரும் பயங்கரவாத போராட்டத்துக்கு எதிராக துணிந்து நிற்க வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு, பிராந்திய ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இந்த துயர சம்பவம், பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் பொறுப்பையும் அதிகரிக்கிறது. பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் நீடித்த அமைதியை உறுதி செய்து ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு வாயிலாக, பயங்கரவாதத்தின் வேர்கள் அழிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.
அமெரிக்கா உறுதி
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இந்தியாவுக்கு முழு ஆதரவை வழங்குவதாக அமெரிக்க உளவுத் துறை அமைப்பான எப்.பி.ஐ., தெரிவித்துள்ளது. எப்.பி.ஐ., இயக்குநர் காஷ் படேல் கூறுகையில், ''இந்த சம்பவம், பயங்கரவாதத்தால் நம் உலகம் தொடர்ந்து எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை நினைவூட்டுகிறது. பாதிக்கப் பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். இந்த விவகாரத்தில் இந்திய அரசுக்கு எங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குவோம்,'' என்றார்.முன்னதாக அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட், சமூக வலைதள பக்கத்தில், 'இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை வேட்டையாடும் போது, நாங்கள் உங்களுடன் இருப்போம்' என, குறிப்பிட்டுள்ளார்.