உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போலி செய்தியை நம்பி பாக்., அமைச்சர் பெருமிதம்

போலி செய்தியை நம்பி பாக்., அமைச்சர் பெருமிதம்

இஸ்லாமாபாத்: பிரபல ஆங்கில பத்திரிகையில் வெளியானதாக கூறப்படும் செய்தியை மேற்கோள்காட்டி, பாக்., விமானப் படையை அந்நாட்டு அமைச்சர் இஷாக் தார் பாராட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரபல நாளிதழான, 'தி டெய்லி டெலிகிராப்' இந்தியா - பாக்., மோதல் குறித்து வெளியிட்ட செய்தியில், பாக்., விமானப் படையை பாராட்டியதாக தகவல் வெளியாகின. இது தொடர்பாக அந்நாளிதழின் முகப்பு பக்க படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதில், 'வானத்தின் மறுக்க முடியாத ராஜா - பாகிஸ்தான் விமானப் படை' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தியை அடிப்படையாக வைத்து அந்நாட்டு பார்லி.,யில் விமானப் படைக்கு, பாக்., வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கிடையே, 'தி டெய்லி டெலிகிராப்' நாளிதழில் வெளியானதாக கூறப்படும் செய்தியின் உண்மைத்தன்மையை, பாக்.,கின், 'டான்' நாளிதழ் ஆராய்ந்தது. முடிவில், அந்த செய்தி போலி என்றும் தெரியவந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் கதீஷா சித்திக் என்பவர் கடந்த 10ம் தேதி இந்த போலி படத்தை பகிர்ந்த நிலையில், 66,000க்கும் மேற்பட்டோர் இதை பார்த்துள்ளனர். கைபர் பக்துன்குவா மாகாண பிரதமரின் ஒருங்கிணைப்பாளர் இக்தியார் வாலி கான், இதை தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை