அமெரிக்க அதிபர் டிரம்பின் கேள்வியால் நெளிந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்
கெய்ரோ:எகிப்தில் நடந்த காசா அமைதி உச்சி மாநாட்டில் தன்னைப் பாராட்டிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பை, ஒரு கேள்வியை கேட்டு தர்ம சங்கடமான சூழலுக்கு தள்ளினார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். எகிப்தில் நேற்று முன்தினம் காசா அமைதி உச்சி மாநாடு நடந்தது. இதில் பேசிய டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தன் பின்னால் இருந்ததை கவனிக்காமல், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது முன்வந்து தான் இருப்பதை ஷெரிப் காட்டினார். ''நீங்கள் இங்கே இருக்கிறீர்கள், எனக்கு மிகவும் பிடித்த, உங்களுடைய ராணுவத் தளபதி ஆசிம் முனிர் இங்கே இல்லை. அவரது வாழ்த்துக்களை இங்கே தெரிவிக்க போகிறீர்களா,'' என்று கேட்டார். அதன் பின், நீங்கள் என்னிடம் சொன்னதை சொல்ல விரும்புகிறீர்களா என்று அவர் கேட்டார். பாராட்டு உணர்ச்சிவசப்பட்ட ஷெரிப், டிரம்பை வெளிப்படையாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பாராட்டினார். அடுத்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பை அதிகாரப்பூர்வமாக பரிந்துரைக்க விரும்புவதாகவும் வெளிப்படையாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசினார். இந்தியா ஒரு சிறந்த நாடு என்று கூறிய அவர், அதன் தலைமை பொறுப்பில், எனக்கு மிகவும் பிடித்த நண்பர் இருக்கிறார் எனவும், அவர் அற்புதமான வேலைகளை செய்து வருகிறார் எனவும், மோடியை பெயர் குறிப்பிடாமல் பாராட்டினார். அதன் பின், ஷெரிப் பக்கம் திடீரென திரும்பிய டிரம்ப், இனி பாகிஸ்தானும், இந்தியாவும் மிக நன்றாக இணைந்து வாழப் போகின்றன என்று நான் நினைக்கிறேன், இல்லையா, என்று கேள்வி எழுப்பினார். சமாளிப்பு
இக்கேள்வி, ஷெரிப்பை தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாக்கியது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஒரு சிக்கலான பிரச்னையில் டிரம்ப் அத்தனை எளிதாக கேட்டதால், எந்த வார்த்தையும் பேசாமல், ஒரு அசவுகரியமான புன்னைகையுடன் தலையை அசைத்தார் ஷெரிப்.