| ADDED : செப் 27, 2025 06:01 PM
குவாங்ஜு: தென்கொரியாவில் நடந்த பாரா உலக வில்வித்தை சாம்பியன் போட்டியில் இந்தியாவின் 18 வயது வீராங்கனை ஷீத்தல் தேவி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். ஒரே நாளில் இந்தியா 5 பதக்கங்களை வென்றுள்ளது.குவாங்ஜு நகரில் நடந்த உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான காம்பவுன்ட் ஒற்றையர் பிரிவில் துருக்கியைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஒஸ்நுர் குரே கிர்டியை எதிர்த்து, இந்தியாவின் 18 வயதே ஆன ஷீத்தல் தேவி விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில் 146-143 என்ற நூலிழை வித்தியாசத்தில் ஷீத்தல் தேவி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன்மூலம், 18 வயதே ஆன ஒரு வீராங்கனை சாம்பியன் பட்டத்தை வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்தத் தொடரில் ஷீத்தல் தேவி வெற்றி பெறும் 3வது பதக்கம் இதுவாகும். கலப்பு இரட்டையர் பிரிவில் டோமன் குமாருடன் அவர் வெண்கலம் வென்றிருந்தார். அதேபோல, பெண்கள் இரட்டையர் பிரிவில் ஷீத்தல் தேவி, சரிதா இணை வெள்ளியை வென்று அசத்தியிருந்தது. அதேபோல, காம்பவுன்ட் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் டோமன் குமார், சக நாட்டைச் சேர்ந்த ராகேஷ் குமாரை தோற்கடித்து தங்கம் வென்று அசத்தியிருந்தார். பைனலில் ராகேஷ் குமாரின் வில்லில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர் போட்டியில் இருந்து பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், அவர் வெள்ளி வென்றார். பாரா உலக வில்வித்தை சாம்பியன் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஷீத்தல் தேவி மற்றும் டோமன் குமார் தங்கம் வென்றிருப்பது பாராட்டுக்களை பெற்று வருகிறது.