இஸ்ரேல், ஹமாஸ் இல்லாமல் முடிந்தது அமைதி மாநாடு
கெய்ரோ:காசா போர் நிறுத்தத்துக்கான அமைதி உச்சி மாநாடு, தன் நோக்கத்தை எட்டியதா அல்லது விமர்சகர்கள் சொன்னதைப் போன்று இது ஒரு சர்க்கஸா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. கையெழுத்து அமெரிக்கா முன்மொழிந்த 20 அம்ச திட்டங்களின் முதல் கட்டத்திற்கு மட்டுமே, இஸ்ரேலும் ஹமாசும் ஒப்புதல் அளித்துள்ளன. எகிப்தின் ஷர்ம் - எல் - ஷேக்கில் நடந்த உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்சிசி இணைந்து தலைமை வகித்தனர். அமெரிக்காவின் 20 அம்ச திட்டத்தின் முதல் கட்டத்தை ஆதரிப்பதற்காக 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். உச்சி மாநாட்டின் கவனம் போர் நிறுத்தத்திற்கான சர்வதேச ஆதரவு, காசாவின் எதிர்கால நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவற்றில் இருந்தது. குறிப்பாக, போரில் ஈடுபட்ட இஸ்ரேல், ஹமாஸ் பங்கேற்காத நிலையில், உச்சி மாநாடு பெரும்பாலும் போர் நிறுத்தத்தின் ஆரம்ப கட்டத்திற்கான அடையாள கையெழுத்து விழாவாகவே இருந்தது. மிக முக்கியமான கேள்விகளுக்கு இம்மாநாட்டில் பதில் இல்லை. பின் எதற்காக இந்த மாநாடு; யாருக்காக இந்த மாநாடு என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது. சமாதான ஆவணமான இந்த அமைதி ஒப்பந்தத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் எல் சிசி மற்றும் கத்தார், துருக்கி தலைவர்கள் கையெழுத்திட்டனர். நம்பிக்கை இருப்பினும், தீர்க்க வேண்டிய முக்கியமான பிரச்னைகள் கேள்விக் குறியாக உள்ளன. அதில் ஒன்று காசாவின் நிர்வாகம், மற்றொன்று ஹமாஸ் மற்றும் பிற ஆயுத குழுக்களின் ஆயுத குறைப்பு நடவடிக்கை. ஆனால், இவை குறித்து எதுவும் இடம்பெறவில்லை. மாநாட்டில் நடந்தவை பெரும்பாலும் டிரம்பை பற்றியதாக மட்டுமே இருந்தது. மாநாட்டுக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலும், நிரந்தர தீர்வுக்கான எந்த அம்சமும் இல்லை. ஆழமான அரசியல் பிரச்னைகளை நிவர்த்தி செய்வதை விட போர்நிறுத்தம் செய்வது மட்டுமே மிக முக்கியமானதாக இருந்தது. இஸ்ரேலிய படைகளை முழுமையாக திரும்ப பெறுதல், காசா மறுசீரமைப்பு, போருக்கு பிந்தைய நிர்வாகம் ஆகிய விஷயங்கள் இனி வரும் பேச்சுகளில் தீர்க்கப்படும் என தெரிகிறது. எகிப்து உச்சி மாநாட்டின் சாதனை என்னவென்றால், போர் நிறுத்தத்துக்கான சர்வதேச சமூகத்தின் ஒப்புதலை பெறுவதன் வாயிலாக, அதை இருதரப்பும் கடைப்பிடிக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே. சுருக்கமாக சொல்வதென்றால், தற்போது காசா ஒரு பலஹீனமான அமைதி பெற்றுள்ளது. நெதன்யாகு ஏன் பங்கேற்கவில்லை? இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மத விடுமுறையை காரணம் காட்டியிருந்தாலும், மாநாட்டின் சூழல் காரணமாக மற்ற அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் வலுவான எதிர்ப்பு காரணமாகவே, அவர் பங்கேற்பது தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் போன்ற பிற தலைவர்கள் பங்கேற்ற சூழலில், இஸ்ரேலிய பிரதமரின் மாநாட்டு வருகை பல தரப்பினரை சங்கடப்படுத்தும் என்பதால், அவர் கலந்துகொள்ளவில்லை என தெரிகிறது. இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பதற்றமான உறவுகள் காரணமாக, அனைத்து முக்கிய தலைவர்களும் கூடும் இடத்தில் நெதன்யாகு கலந்து கொள்வது விரும்பத்தக்கதாக இல்லை என்பதால், வராமல் இருக்குமாறு எகிப்து கேட்டுக்கொண்டு இருக்கலாம் என தெரிகிறது. நேபாள ஹிந்து மாணவர் பலி! கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி தெற்கு இஸ்ரேலில் உள்ள கிபுட்ஸ் அலுமிம் என்ற பகுதியில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது, பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டவர் நேபாளத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் பிபின் ஜோஷி. இவர், இஸ்ரேலில் விவசாயம் தொடர்பான படிப்பை படித்துக்கொண்டே, விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பிடம் இருந்து பிணைக் கைதிகளில் இவர் மட்டுமே ஹிந்து என்று கூறப்படுகிறது. அவர் உயிருடன் இருப்பதாக நம்பப்பட்டது. இந்நிலையில், ஹமாஸ் விடுவித்த, கடைசி 20 பிணைக் கைதிகளில் அவர் இல்லை. இதனால் அவர் இறந்திருப்பார் என்று தெரிகிறது.