இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.இந்தோனேசியாவின் மத்திய மாகாண பகுதியான சுலவேசியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 6.1 அலகுகளாக பதிவானது.நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் இருப்பிடங்களை விட்டுவிட்டு தெருக்களில் கூடினர். அங்குள்ள தேவாலயம் பகுதியாக சேதம் அடைந்தது. அப்போது பிரார்த்தனையில் இருந்த பலரும் உடனடியாக அங்கு வெளியேறினர். மேலும் அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த தேவாலயம் ஒன்றும் நிலநடுக்கத்தால் சேதத்திற்கு ஆளானது. நிலநடுக்கத்தின் போது சூப்பர் மார்க்கெட் லேசாக குலுங்கியது, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி இருக்கிறது.நிலநடுக்கத்தால் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த விவரமும் இல்லை என்று அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையம் கூறி உள்ளது.