| ADDED : நவ 11, 2024 06:21 AM
லண்டன்: பிரிட்டனில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அளித்த தீபாவளி விருந்தில் அசைவ உணவு மற்றும் மது வகைகள் பரிமாறப்பட்டதற்கு, அங்கு வசிக்கும் ஹிந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர். லண்டனில் உள்ள இவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் முதன்முறையாக, தீபாவளி பண்டிகையை ஒட்டி முக்கிய பிரமுகர்களுக்கு சமீபத்தில் விருந்துஅளித்தார். இதில், விருந்தினர்களுக்கு அசைவ உணவுகள், மதுபானங்கள் வழங்கப்பட்டன.இதற்கு கண்டனம் தெரிவித்த பிரிட்டனில் உள்ள ஹிந்து அமைப்புகள், 'ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி விருந்தில், அசைவ உணவு பரிமாறப்பட்டது ஏன்?' என கேள்வி எழுப்பியுள்ளன.இது குறித்து 'இன்சைட் யு.கே.,' என்ற ஹிந்து அமைப்பு, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு: புனித பண்டிகையான தீபாவளி, துாய்மை மற்றும் பக்தியை வலியுறுத்துகிறது. சைவ உணவுகளுடன் பாரம்பரியமாக கொண்டாடப்படும் இந்த நிகழ்வின் போது, அசைவ உணவுகள், மதுபானங்கள் போன்றவற்றை தவிர்த்திருக்க வேண்டும். பிரதமரால் நடத்தப்பட்ட இந்த கொண்டாட்டத்தின் போது வழங்கப்பட்ட உணவு வகைகள், மத மரபுகள் மற்றும் புரிதல் இல்லாததை காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், பிரதமர் ஸ்டார்மர் தரப்பில் இருந்து இது தொடர்பாக எந்த விளக்கமும் இதுவரை வெளியிடப்படவில்லை.