பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகருக்கு 4 ஆண்டு சிறை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்:பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல 'ராப்' இசை பாடகருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிரபலமான ராப் பாடகர் சீன் டிடி கோம்ப்ஸ், 55. இவர், தன் முன்னாள் காதலிகள் இருவ ரை பல ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட சீன் டிடி, புரூக்ளின் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று முன்தினம் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்தது. தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன், நீதிமன் றத்தில் பேசிய கோம்ப்ஸ், தன் முன்னாள் காதலிகளிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். இனி ஒருபோதும் வேறொருவரின் மீது கைவைக்க மாட்டேன் என்றும் மன்னிப்பு கோரினார். கோம்ப்ஸின் குழந்தைகள், தங்கள் தந்தை திருந்திவிட்டதாகவும், தங்கள் நலனுக்காக அவருக்கு கருணை காட்டுமாறும் கோரினர். அப்போது கோம்ப்ஸ் கதறி அழுதார். இந்த வழக்கில், அனைத்து வாதங்களையும் கேட்ட தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட நீதிபதி அருண் சுப்பிரமணியன் தீர்ப்பளித்தார். அவர் தன் தீர்ப்பில், 'இது வெறும் காதல் அனுபவமோ அல்லது இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் தொடர்பான பிரச்னையோ அல்ல. மாறாக ஒருவரை அடிமைப்படுத்தி, தற்கொலை மனநிலைக்கு தள்ளும் செயல். 'இந்த விஷயத்தில் கோம்ப்சுக்கு கருணை காட்ட முடியாது' என்று கூறி, பாடகர் கோம்ப்ஸ்க்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 4.20 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். நீதிபதி அருண் சுப்பிரமணியன் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பிட்ஸ்பர்க் நகரில் பிறந்தவர் நீதிபதி அருண் சுப்பிரமணியன். தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அவரது தந்தை சுப்பிரமணியன் அமெரிக்காவில் இன்ஜினியராக பணியாற்றியவர். கடந்த 2022ல், அப்போதைய அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட அருண் சுப்பிரமணியன், சட்டம் அனைவருக்கும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையில் பல்வேறு வழக்குகளை கையாண்டு இருக்கிறார்.