உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பேச்சுவார்த்தை நடத்த தூதரை அனுப்புகிறது ரஷ்யா : தொடர்கிறது சிரியாவின் மக்கள் வேட்டை

பேச்சுவார்த்தை நடத்த தூதரை அனுப்புகிறது ரஷ்யா : தொடர்கிறது சிரியாவின் மக்கள் வேட்டை

டமாஸ்கஸ் : சிரியாவில் ஏற்பட்டுள்ள பிரச்னையைப் பேசித் தீர்ப்பதற்காக, ரஷ்யா தனது சிறப்புத் தூதர் ஒருவரை இன்று அந்நாட்டிற்கு அனுப்பி வைக்கிறது. அரபு லீக்கின் பொதுச் செயலரும், பேச்சுவார்த்தைக்காக விரைவில் சிரியா செல்ல உள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் டமாஸ்கசின் தென்பகுதியில் உள்ள கபார்சூசே மாவட்டத்தில் ஒரு மசூதியை ராணுவம் முற்றுகையிட்டதை எதிர்த்து நேற்று முன்தினம் அந்த மசூதியிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பெருமளவில் மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

இந்த ஆர்ப்பாட்டங்களின் போது ராணுவம் நடத்திய தடியடியில் ஒருவர் பலியானார்; பலர் காயம் அடைந்தனர். டமாஸ்கசின் மையப் பகுதி, வழக்கம் போல் அமைதியாக இருக்கிறது. அதேநேரம், நாட்டின் வடபகுதியில் உள்ள டைர் அல் ஜோர் நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் ராணுவம் தொடர்ந்து பீரங்கித் தாக்குதல் நடத்தி வருகிறது. வீடுவீடாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று அரபு லீக் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் அவசரமாகக் கூடி, லிபியா மற்றும் சிரியா விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர். ஆலோசனை முடிவில், சிரியா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த, அரபு லீக் பொதுச் செயலர் நபில் அல் அரபியை, சிரியா அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

சிரியாவின் அண்டை நாடும், நட்பு நாடுமான துருக்கி, சிரியா மீதான தனது நம்பிக்கையை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளது. அதே போல், ஈரானும், சிரியா தனது மக்களின் கோரிக்கைகளை செவிமடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. ஐ.நா.,வில், சிரியா மீதான மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்க முட்டுக்கட்டை போட்டுவரும் ரஷ்யா, இன்று தனது சிறப்புத் தூதர் ஒருவரை சிரியாவுக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ