உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்: ரஷ்யாவின் அடுத்த அறிமுகம்

அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்: ரஷ்யாவின் அடுத்த அறிமுகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்யா, 'கபரோவ்ஸ்க்' என்ற பெயரில் புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை நேற்று அறிமுகம் செய்தது. இது, 'பொஸைடான்' எனப்படும் அணு ஆயுத ட்ரோன்- ஏந்திச் செல்லும் திறன் கொண்டது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா கடந்த சில நாட்களாக, தன்னிடம் உள்ள சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சோதனை செய்து வருகிறது-. கடந்த, அக்., 21ல், 'புரோவெஸ்ட்னிக்' எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்தது. இது அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும், அணு சக்தியில் இயங்கக் கூடியது. இதையடுத்து, கடலில் செல்லும், 'பொஸைடான்' எனப்படும் அணு ஆயுத ட்ரோனை அக்., 29ல் சோதித்தது. இது, கடல் அலைகளை மிக உயரமான அளவுக்கு துாண்டி எதிரி நாட்டின் கடலோரப் பகுதிகளை அழிக்கும் திறன் வாய்ந்தது. இவற்றின் தொடர்ச்சியாக, புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா அறிமுகம் செய்தது. இதற்கு 'கபரோவ்ஸ்க்' என்று பெயரிட்டுள்ளனர். இது ஒரு ரஷ்ய நகரின் பெயர். இந்த நீர்மூழ்கி கப்பல் குறித்து ரஷ்ய ராணுவ அமைச்சர் ஆண்ட்ரேய் பெலோசோவ் கூறுகையில், “கபரோவ்ஸ்க் நீர்மூழ்கி கப்பல் பொஸைடான் போன்ற அணுசக்தி முறையில் இயங்கும் ஆயுதங்களை ஏந்தி செல்லும் திறன் பெற்றது. “ரஷ்யாவின் கடல் எல்லைகளை பாதுகாப்பது, சர்வதேச கடல் எல்லைகளில் ரஷ்யாவின் நலன்களை உறுதிபடுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக, 'கபரோவ்ஸ்க்' நீர்மூழ்கி கப்பல் அறிமுகப்படுத்தப்படுகிறது,” என்றார். இந்த புதிய நீர்மூழ்கி கப்பல் ரஷ்யாவின், 'சீவ்மாஷ்' கப்பல் கட்டும் தொழிற்சாலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கு தான் இந்தியாவின் ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர் கப்பல் மறுசீரமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பேசும் தமிழன்
நவ 03, 2025 19:38

ரஷ்யாவின் வெற்றி இந்திய நாட்டின் வெற்றி.... ரஷ்யா மட்டுமெ நமது உண்மையான நட்பு நாடு.... வாழ்க ரஷ்யா இந்திய நட்பு !!!


jss
நவ 03, 2025 15:56

மூன்றாம் உலகப்போர் துவங்கப்போகிறதா? அது தொடங்குவதற்க்கு முன்பு தமிழக முதல்வர் சட்ட சபையைக்கூட்டி ஒரு தீரமானம் போட்டு வல்லரசுகளை திக்குமுக்காடச்செய்யவேண்டும் ( காசாவக்கு ஆதரவாக போட்டது போல. இந்த தீர்மனத்தை பார்த்து பயந்துதான் மோடி கோலாலம்பூர் செல்லாமல் இருந்தார் என்று உலகம் முழுதும் நம்ப்ப்படுகிறது)


Velan V
நவ 03, 2025 15:03

ரஷ்யா உக்ரைனை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கு தயாராகிவிட்டது


Anand
நவ 03, 2025 10:34

மேற்கத்திய நாடுகளின் கொட்டம் அடங்கப்போவது உறுதி.


Nagarajan D
நவ 03, 2025 09:31

ரஷ்யா அமெரிக்காவால் சிதறுண்டது அதே போல் அமெரிக்காவும் சிதறவேண்டும். பிறகு உலகில் எங்குமே எந்த கலவரமும் நடக்காது. எந்த நாடு நல்ல இருந்தாலும் இவனுங்களுக்கு பிடிக்காது...


Dv Nanru
நவ 03, 2025 07:51

இந்த புதிய நீர்மூழ்கி கப்பல் ரஷ்யாவின், சீவ்மாஷ் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் நடுங்கி போய் இருக்கும் அமேரிக்காவின் தூக்கம் தொலைந்தது ..


Kasimani Baskaran
நவ 03, 2025 03:50

ஐரோப்பா என்னவாகப்போகிறதோ என்ற கவலை வருகிறது..


புதிய வீடியோ