பிரச்னைகளுக்கு போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது வலியுறுத்தல்!அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என மோடி பேச்சு
லாவோஸ், யுரேஷியா, மேற்காசிய பிராந்தியங்களில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரச்னைகளுக்கு போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது என தெரிவித்தார்.தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் நடந்த 19வது கிழக்கு ஆசிய மாநாடு மற்றும் 21வது ஆசியான் - இந்தியா மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோதல்கள் காரணமாக, மிகவும் எதிர்மறையாக பாதிக்கப்பட்ட நாடுகள் உலகளாவிய தெற்கு நாடுகளாகும். யுரேஷியா, மேற்காசிய பிராந்தியங்களில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க வேண்டும்.ஒற்றுமைநான் புத்தரின் தேசத்தில் இருந்து வருகிறேன். இது, போருக்கான காலம் அல்ல என்று பலமுறை கூறியுள்ளேன்.பிரச்னைகளுக்கு போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது. இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சர்வதேச சட்டங்களை மதிப்பது அவசியம். இதற்கிடையே, உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதை ஒடுக்க, மனிதநேயத்தில் நம்பிக்கை உள்ள சக்திகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு சீனாவில் கடந்த மாதம் வீசிய 'டைபூன் யாகி' புயலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த சவாலான காலகட்டத்தில், சத்பவ் திட்டத்தின் வாயிலாக எங்களால் இயன்ற உதவிகளை செய்துள்ளோம்.ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் ஒற்றுமையை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளது. மியான்மர் விவகாரத்தில் ஆசியானின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்.ஆலோசனைஅங்கு, மனிதாபிமான உதவியை நிலைநிறுத்துவதும், ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் முக்கியமானது என நம்புகிறோம். நாளந்தா பல்கலையை மீட்டெடுப்போம் என, கிழக்காசிய உச்சி மாநாட்டில் வாக்குறுதி அளித்து இருந்தோம். புதிய பல்கலை வளாகத்தை திறந்து, அந்த வாக்குறுதியை கடந்த ஜூன் மாதம் நிறைவேற்றி உள்ளோம்.நாளந்தாவில் நடக்கும் உயர்க்கல்வித் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க, இங்குள்ள அனைத்து நாடுகளையும் அழைக்கிறேன்.லாவோஸ் பிரதமர் சோனெக்சே சிபாண்டோன், இந்த மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.மாநாட்டுக்குப் பின், லாவோஸ் பிரதமர் சோனெக்சே சிபாண்டோன் உடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். மாநாட்டில் பங்கேற்க வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். முன்னதாக, ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸானையும் மோடி சந்தித்து பேசினார்.கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவையும் பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் கருத்து வேறுபாடு நிலவும் சூழலில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
தமிழகத்தில் தயாரான புத்தர் சிலை
பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் அங்குள்ள தலைவர்களுக்கு நம் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட பொருட்களை நினைவுப்பரிசாக வழங்கி வருகிறார். இந்நிலையில், நேற்றைய லாவோஸ் பயணத்தின்போது, லாவோஸ் அதிபர் தொங்லுன் சிசவுலித்துக்கு, தமிழக கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட வெள்ளியிலான புத்தர் சிலையை பரிசாக வழங்கினார். நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக் ஷனுக்கு, மஹாராஷ்டிராவில் தயாரிக்கப்பட்ட வெள்ளி விளக்குகளை பரிசாக அளித்தார்.ஜப்பான் பிரதமர் இஷிபாவுக்கு, மேற்கு வங்கத்தில் தயாரிக்கப்பட்ட வெள்ளியிலான மயிலின் சிலையையும், தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவுக்கு லடாக்கில் தயாரிக்கப்பட்ட மர டேபிள் ஒன்றையும் பரிசாக அளித்தார்.