உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதத்தை எதிர்கொள்ள துவங்கப்பட்டதே ஷாங்காய் அமைப்பு

பயங்கரவாதத்தை எதிர்கொள்ள துவங்கப்பட்டதே ஷாங்காய் அமைப்பு

பீஜிங்:ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை எதிர்கொள்ள துவங்கப்பட்ட அமைப்பு, தொடர்ந்து அதற்கு எதிராக போராட வேண்டும், என, நினைவூட்டினார்.சீனா மற்றும் ரஷ்யா இணைந்து, எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை, 2001ல் துவக்கின. பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை எதிர்கொள்ள இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகியவை இந்த அமைப்பின் முக்கிய நோக்கம்.இந்த அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான் உட்பட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. தற்போது இந்த அமைப்புக்கு சீனா தலைமை வகிக்கிறது. இந்நிலையில் சீனாவின் தியான்ஜின்கில், அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நேற்று நடந்தது.இதில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:பயங்கரவாதம், பிரிவினைவாதம், மதவாதம் ஆகிய தீயசக்திகளை எதிர்கொள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு துவங்கப்பட்டது. இந்த தீயசக்திகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சமீபத்தில் இந்தியா இதை எதிர்கொண்டது.ஏப்ரல் 22ல் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலாத் துறையை அழிக்கவும், மதவாத பிளவை விதைக்கவும் இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்தது. தாக்குதலை நடத்தியவர்கள், ஒருங்கிணைத்தவர்கள், நிதியுதவி வழங்கியவர்கள் அனைவரையும் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்க வலியுறுத்தியது.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பும், எதற்காக துவங்கப்பட்டதோ அந்த நோக்கங்களுக்கு உண்மையாக இருந்து, இந்த சவால்களை எதிர்கொள்ள உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த கூட்டத்தில் பங்கேற்ற சீன அதிபர் ஷீ ஜின்பிங், மக்கள் அமைதி மற்றும் நிலைத்தன்மையை எதிர்பார்க்கின்றனர். எனவே பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் செயல்முறைகளை மேம்படுத்த வேண்டும், என கூறினார்.2020ல் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன வீரர்கள் மோதிக் கொண்டனர். அதன் பின் தற்போது தான் முதன் முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் சீனா சென்றுள்ளார்.

சீன அதிபருடன் பேசியது என்ன

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டுக்கு முன்னதாக, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.இது குறித்து ஜெய்சங்கர் கூறுகையில், சீன அதிபர் ஜின்பிங்கிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து செய்தியை தெரிவித்தேன். இந்தியா - சீனா இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து அவரிடம் விளக்கினேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி