உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தின கொண்டாட்டம் பாகிஸ்தானில் மூவர் பலி

துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தின கொண்டாட்டம் பாகிஸ்தானில் மூவர் பலி

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினத்தை கொண்டாடிய சம்பவங்களில் குண்டு பாய்ந்து 8 வயது சிறுமி உட்பட மூவர் பலியாகினர்; 64 பேர் காயமடைந்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவே பல இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கராச்சியில் இரவு 12:00 மணி ஆனதும் லியாகதாபாத், மெஹ்மூதாபாத் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் தனிநபர்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினத்தை வரவேற்றனர். இந்த செயலால் அசிசாபாதில் 8 வயது சிறுமியும், கொரங்கியில் முதியவர் உட்பட இருவரும் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். 64 பேர் துப்பாக்கிச் சூட்டால் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். யார், யார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக, 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் கராச்சியில், இது போன்று, கொண்டாட்டம் ஒன்றில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்; 42 பேர் காயமடைந்தனர். இருப்பினும் இந்த சம்பவங்கள் தொடர்கின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவலக்கோட் பகுதியில், விடுதலைக் கேட்டு மக்கள் போராட்டங்களில் நேற்று ஈடுபட்டனர். இதையடுத்து, தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும் போலீசார் கூட்டத்தை கலைத்தனர். போலீஸ் நிலையம் மீது தாக்குதல் பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் அந்நாட்டு அரசுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்கள் அதிகம் உள்ளன. இவர்கள் அந்த மாகாணத்தை பிரித்து தனி நாடாக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இந்நிலையில், அந்த மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான பெஷாவரில் உள்ள ஹசன் கேல் போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு போலீசார் உயிரிழந்தார். இதே போல் அப்பர் திர் மாவட்டத்தில் போலீஸ் வாகனத்தின் மீது நடந்த தாக்குதலில், நான்கு போலீசார் கொல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ