கொலம்பிய அதிபர் மீது பொருளாதார தடை டிரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
வாஷிங்டன்: உலகளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். விமர்சனம்
போதைப்பொருள் கும்பலை தடுக்கும் நடவடிக்கை என்று கூறி, கரீபியன் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் எட்டு கப்பல்களையும் அமெரிக்க ராணுவம் தகர்த்துள்ளது. மேலும் கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி என டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். கொலம்பிய நாட்டு வயல்களில் போதைப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். அமெரிக்காவில் இருந்து பெரிய அளவிலான உதவிகள் மற்றும் மானியங்கள் கிடைத்தும், பெட்ரோ அதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை என்று கூறி, அந்நாட்டிற்கான உதவிகளையும் குறைத்தார். மேலும், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் நாடுகள் பட்டியலில் 30 ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக கொலம்பியாவையும் சேர்த்தார் டிரம்ப். போதைப்பொருள் ஒழிப்பு
இந்நிலையில் தீவிர போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்று கூறி, கொலம்பிய அதிபர் பெட்ரோ, மனைவி, மகன் மற்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஆகிய நான்கு பேர் மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அவர்கள் உலகளவில் போதைப்பொருள் வணிகத்தில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.