உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெனிசுலா மீது படையெடுக்க போகிறாரா டிரம்ப்; போர்க்கப்பல்கள் அணி வகுப்பதால் பதற்றம்

வெனிசுலா மீது படையெடுக்க போகிறாரா டிரம்ப்; போர்க்கப்பல்கள் அணி வகுப்பதால் பதற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: கரீபியன் கடலில் அமெரிக்க போர்க்கப்பல்கள் அணிவகுத்து வருகின்றன.15 ஆயிரம் படைவீரர்களையும் அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் வைத்துள்ளது. வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது. வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவும், அதிபர் டிரம்பும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில், சந்தேகத்துக்குரிய கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், போதை கடத்தல் குற்றச்சாட்டை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ திட்டவட்டமாக மறுத்துஉள்ளார். கப்பல்களில் பயணித்தவர்கள் மீனவர்கள், தொழிலாளர்கள் என்றும், சர்வதேச சட்டத்தை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், கரீபியன் கடற்பகுதியில் போர்க் கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது. இங்குள்ள போர்டோரிகோ தீவில் மூடப்பட்ட விமான தளம் ஒன்றை அமெரிக்கா மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. 20 ஆண்டுக்கு பிறகு இங்கு அமெரிக்காவின் எப் - 35 ரக போர் விமானங்கள், கனரக ஹெலிகாப்டர்கள், சரக்கு விமானங்கள் வந்து இறங்கியுள்ளன.மேலும், உலகிலேயே மிகப் பெரிய மற்றும் அதிநவீன விமானம் தாங்கி போர்க் கப்பலான 'யு.எஸ்.எஸ்., ஜெரால்டு போர்டு' ஒரு குழுவுடன் கரீபியன் கடல் பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது. கரீபியன் கடலில் ஏற்கனவே பல போர்க்கப்பல்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதுமட்டுமன்றி 15 ஆயிரம் படைகளையும் அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆப்பரேஷன் சதர்ன் ஸ்பியர் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

டிரம்ப் சொல்வது என்ன?

இதனால் வெனிசுலா மீது அதிபர் டிரம்ப் படையெடுக்க போகிறார் என அமெரிக்க வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தாக்குதலை எதிர்நோக்கி, தன் படைகளை வெனிசுலாவும் தயார் நிலையில் வைத்துள்ளது. இது குறித்து அதிபர் டிரம்ப், ''வெனிசுலா மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து நான் முடிவு எடுத்து விட்டேன்,'' என்று தெரிவித்துள்ளார். ஆனால் எந்த விதமான நடவடிக்கை என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இந்த போர்க்கப்பல்கள் அணிவகுப்பு வெனிசுலா மீது தாக்குதல் நடத்துவதற்காகவா அல்லது அச்சுறுத்தல் விடுப்பதற்காகவா என்று அமெரிக்க ராணுவம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.கரீபியன் கடலில் அமெரிக்க ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவது ஒரு பொறுப்பற்ற செயல் என்று வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ