| ADDED : நவ 07, 2024 07:56 AM
வாஷிங்டன்: அமெரிக்கா ஒரு தகுதியான, சமரசமில்லாத தலைவரை அதிபராக பெற்றுள்ளதாக அமெரிக்கவாழ் இந்தியரும், குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து, 2வது முறையாக அதிபராக டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், அமெரிக்காவின் 47வது அதிபராக ட்ரம்ப் தேர்வாகி உள்ளார். பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சிக்கு பிரதமர் மோடி உள்பட உலக நாட்டு தலைவர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்கா ஒரு தகுதியான, சமரசமில்லாத தலைவரை அதிபராக பெற்றுள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். குடியரசு கட்சி சார்பில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான உட்கட்சித் தேர்தலில் தோல்வியடைந்த இளம் வேட்பாளரான விவேக் ராமசாமி, டிரம்ப்பின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவராவார். டிரம்ப் வெற்றி குறித்து அவர் கூறியாவது; டிரம்ப் சித்தாந்தவாதியோ, கொள்கைவாதியோ கிடையாது. அவர் ஒரு சமரசமில்லாத அமெரிக்கர். இவரை கொல்வதற்கும், சிறையில் அடைக்கவும், தகுதி நீக்கம் செய்யவும் முயற்சித்தார்கள். ஆனால், ஏதும் வேலைக்காகவில்லை. ஊடகங்களில் டிரம்ப்பை தவறாக சித்தரிக்க முயன்றார்கள். உலகில் தலைசிறந்த நாடாக அமெரிக்கா திகழ வேண்டும். பிற நாடுகளால் நினைத்து கூட பார்க்க முடியாத மனிதநேய மிக்க செயல்களை செய்து காண்பிக்க வேண்டும். அமெரிக்கா ஒரு தகுதியான, சமரசமில்லாத தலைவரை அதிபராக பெற்றுள்ளது, எனக் கூறினார்.