சார்லி கிர்க் நினைவஞ்சலியில் ஒன்றிணைந்த டிரம்ப்-மஸ்க்: இணையத்தில் வைரல் போட்டோ
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
அரிசோனா: ' சுட்டுக் கொல்லப்பட்ட சார்லி கிர்க், அமெரிக்காவின் ஹீரோ. அவருக்கு நாட்டின் உயர்ந்த பதக்கமான ஜனாதிபதி பதக்கம் வெள்ளை மாளிகையில் நடத்தப்படும் விழாவில் வழங்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளர், நண்பர் சார்லி கிர்க். உட்டா பல்கலை.யில் நிகழ்ச்சி ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் மரணம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் 22 வயது வாலிபர் டைலர் ராபின்சன் என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் சார்லி கிர்க்கின் நினைவஞ்சலி நிகழ்வு அரிசோனாவில் நடைபெற்றது. இதில் டிரம்ப் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது; சார்லி சிறந்த அமெரிக்க ஹீரோ. நாடு அவரை மிகவும் நேசித்தது. அவரின் கொலையை திட்டமிட்டு செயல்படுத்திய நபர் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். கடவுள் விரும்பினால் தனது கொடூர குற்றத்திற்கு இறுதி தண்டனையை பெறுவார்.சார்லி கொலை ஒரு தனிப்பட்ட தாக்குதல் அல்ல, நாட்டின் மீதான தாக்குதல். இதுபோன்ற தாக்குதல்கள் எனக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது. வரலாறு கிர்க்கின் செயல்பாடுகளை நினைவில் வைத்திருக்கும். வெள்ளை மாளிகை விழாவில் சார்லி கிர்க் சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கத்தை பெறுவார். அவர் பெரிதும் போற்றும் அழகான வெள்ளை மாளிகையில் அதற்கான விழாவை நடத்துவோம். இவ்வாறு டிரம்ப் பேசினார்.இந்நிகழ்வில், துணை அதிபர் ஜேடி வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் கிர்க்கின் மனைவி எரிக்கா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய எரிக்கா, கணவரை சுட்டுக் கொன்ற கொலையாளியை மன்னிப்பதாக கூறினார்.நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் அதிபர் டிரம்பும், தொழிலதிபர் மஸ்க்கும் அருகருகே அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர். அண்மையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஒருவரையொருவர் பொதுவெளியில் விமர்சித்துக் கொண்ட நிலையில், கிர்க் நிகழ்ச்சியில் கைகுலுக்கியபடி உரையாடிய புகைப்படம் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.டிரம்புடன் பேசியபடி அமர்ந்திருக்கும் இந்த புகைப்படத்தை எலான் மஸ்க் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.