டிரம்ப் ஆதரவாளர் போலந்து அதிபராக தேர்வு; ஐரோப்பிய யூனியனில் இனி குடுமிப்பிடிதான்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
வார்சா : போலந்து நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளரான, பழமைவாத கட்சியின் கரோல் நவ்ரோக்கி, 42, வெற்றி பெற்றுள்ளார்.ஐரோப்பிய நாடான, போலந்தின் அதிபராக உள்ள ஆந்தரிஸ் டுடாவின் பதவிக்காலம், வரும் ஆக.,ல் முடிய உள்ளது. இதையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தன.கடந்த மாதம் 18ம் தேதி நடந்த முதற்கட்டத் தேர்தலில், ஐரோப்பிய யூனியன் ஆதரவு வேட்பாளரான ரபால் டிர்சாஸ்கோவ்ஸ்கி மற்றும் பழமைவாத கட்சி வேட்பாளரான கரோல் நவ்ரோக்கி முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். 50.89 சதவீத ஓட்டு
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், துவக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்த பழமைவாத கட்சி வேட்பாளரான கரோல் நவ்ரோக்கி, 50.89 சதவீத ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தாராளவாத கட்சி வேட்பாளரும், தலைநகர் வார்சாவின் மேயருமான ரபால் டிர்சாஸ்கோவ்ஸ்கி, 49.11 சதவீத ஓட்டுகளை பெற்றார்.ரஷ்யாவுடன் போரை சந்தித்து வரும் அண்டை நாடான உக்ரைனில் இருந்து வந்த அகதிகளுக்கு ஆதரவான கொள்கை உடையவர் நவ்ரோக்கி. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை எதிர்ப்பதோடு, ஐரோப்பிய யூனியன் மீதும் சந்தேகம் தெரிவித்தார்.போலந்தில் பிரதமர் மற்றும் பார்லிமென்ட் தான், நாட்டு நிர்வாகத்தை கவனிக்கும். அதே நேரத்தில் சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்டவற்றில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதை அரசு நிறைவேற்ற அதிபரால் உத்தரவிட முடியும். முட்டுக்கட்டை
தற்போது பிரதமராக உள்ள டொனால்டு டஸ்க் மற்றும் அதிபராக உள்ள ஆந்தரிஸ் டுடா இடையே பல விஷயங்களில் மோதல்கள் உள்ளன. தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில், பிரதமர் டஸ்க் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, டுடா முட்டுக்கட்டை போட்டார்.அடுத்த அதிபராக தேர்வாகியுள்ள நவ்ரோக்கி, ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ அமைப்புக்கு எதிரான கொள்கையை உடையவர். அதனால், பிரதமர் டொனால்டு டஸ்க் உடனான மோதல் தொடரும்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவு கொள்கை உடையவர் நவ்ரோக்கி. அதனால், ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ அமைப்புகளில், போலந்து தொடர்ந்து எதிர்ப்பு குரலையே ஒலிக்கும் என, கூறப்படுகிறது.
முன்னாள் குத்துச்சண்டை வீரர்!
போலந்து அதிபராக தேர்வாகியுள்ள கரோல் நவ்ரோக்கி, ஒரு முன்னாள் குத்துச்சண்டை வீரர். வரலாற்று ஆசிரியரான இவர், சட்டம் மற்றும் நீதிக்கட்சியில் இணைந்தார்.கடந்த 2015 முதல் 2023 வரை அந்தக் கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஊழல்களில் சிக்கியது. கட்சியின் அந்த பிம்பத்தை உடைக்கும் நோக்கத்துடன், நவ்ரோக்கியை கட்சியில் இணைத்துக் கொண்டது.