உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசா போரை நிறுத்துங்கள்; டிரம்ப் மனைவிக்கு கடிதம் எழுதிய துருக்கி அதிபர் மனைவி

காசா போரை நிறுத்துங்கள்; டிரம்ப் மனைவிக்கு கடிதம் எழுதிய துருக்கி அதிபர் மனைவி

அங்காரா; காசாவில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியாவுக்கு துருக்கி அதிபரின் மனைவி எமினே கடிதம் எழுதி உள்ளார்.இஸ்ரேல் காசா இடையேயான போர் நீண்டகாலமாக நிலவி வருகிறது. கடந்த 22 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த போரில் கிட்டத்தட்ட 63,000க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கின்றனர்.தொடரும் உயிர்பலிகள் எதிரொலியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று உலகின் பல நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பணய கைதிகள் விடுதலை, ஆயுத குறைப்பு நடவடிக்கை என்ற தமது நிபந்தனையை ஏற்கவில்லை என்றால் காசா நகரம் முற்றிலும் அழிக்கப்படும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.இந் நிலையில் காசாவில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியாவுக்கு துருக்கி அதிபர் மனைவி எமினே கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறி உள்ளதாவது; உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்ததை பாராட்டுகிறேன். அதே போல, நீண்ட நாட்களாக நீடித்து வரும் காசா போரை உடனடியாக நிறுத்தக் கோரி, இஸ்ரேல் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்ப வேண்டும்.காசா போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன குழந்தைகளின் சார்பாக குரல் கொடுக்க வேண்டும். குழந்தைகள் இறப்புக்கு எதிராக பேச வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் துருக்கி அதிபர் மனைவி எமினே குறிப்பிட்டு உள்ளார். முன்னதாக, அலாஸ்காவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது, ரஷ்யா அதிபர் புடினுக்கு, டிரம்ப் மனைவி மெலனியா கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தை அலாஸ்கா பேச்சுவார்த்தையின் போது, புடினிடம் டிரம்ப் நேரிடையாகவே வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ