கைதான ஏழு ஆண்டுக்கு பின் துருக்கி செய்தியாளருக்கு துாக்கு
துபாய்: சவுதி அரேபியாவில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைதான துருக்கி செய்தியாளரை, ஏழு ஆண்டுகளுக்குப் பின் அந்நாட்டு அரசு துாக்கிலிட்டுள்ளது.மேற்காசிய நாடான துருக்கியைச் சேர்ந்தவர் அல் ஜாசர். கடந்த 2013 - 15 காலக்கட்டங்களில் இவர், மத்திய கிழக்கு நாடுகளில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் அரசுத் துறைகளில் அரங்கேறும் ஊழல் குறித்து தன் வலைதள பக்கத்தில் கட்டுரைகளாக வெளியிட்டு வந்தார். இது, அந்நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பறிமுதல்
குறிப்பாக, சவுதி அரச குடும்பத்தை விமர்சிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் அல் ஜாசர் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இதுதவிர பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்கள் பற்றியும் சர்ச்சை கருத்துகளை குறிப்பிட்டிருந்தார். கடந்த 2018ல், அல் ஜாசரின் வீட்டிற்குள் சென்ற சவுதி போலீசார் அவரை கைது செய்ததுடன், அவரது மொபைல் போன்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.சவுதி அரசின் இச்செயல்பாட்டை கண்டித்து சமூக செயற்பாட்டாளர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். அல் ஜாசர் மீது பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது, சவுதி அரசுக்கு எதிராக செயல்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தண்டனை
எனினும், இவை அனைத்தும் பொய் குற்றச்சாட்டுகள் என அல் ஜாசரின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். கைதான அல் ஜாசரை, எங்கு அடைத்து வைக்கப்பட்டார் என்ற விபரத்தை சவுதி அரசு ஏழு ஆண்டுகளாக ரகசியம் காத்துவந்த நிலையில், நேற்று முன்தினம் துாக்கிலிட்டது. இதுகுறித்து சவுதி அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி மரண தண்டனை நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. எனினும், இதுதொடர்பான விசாரணை எங்கு, எப்போது, எத்தனை ஆண்டுகள் நடந்தது என்பன போன்ற விபரங்களையும் சவுதி அரசு வெளியிடவில்லை.