உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 6 லட்சம் சீன மாணவருக்கு அமெரிக்கா அனுமதி

6 லட்சம் சீன மாணவருக்கு அமெரிக்கா அனுமதி

வாஷிங்டன்:அமெரிக்காவில் படிக்க, ஆறு லட்சம் சீன மாணவர்கள் அனுமதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளது, அவரது தீவிர ஆதரவாளர் களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதும், எம்.ஏ.ஜி.ஏ., எனும் 'மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்' என்ற 'அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள்' கொள்கையை கையிலெடுத்தார். உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரியை விதித்தார். குறிப்பாக, சீனாவுடன் வரி தொடர்பாக நீண்ட சர்ச்சை எழுந்தது. இதை தவிர, குடியேற்ற கொள்கைகளிலும் கடுமையான அறிவிப்புகளை வெளியிட்டார். விசா வழங்குவதில் கடும் கட்டுப்பாடு உள்ளிட்டவை இதில் அடங்கும். குறிப்பாக, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களுக்கான விசாவில், சிக்கலான நடைமுறைகளை அமல்படுத்தினார். இந்நிலையில், இதற்கு முற்றிலும் மாறுபட்டு திடீரென சீன மாணவர்கள் ஆறு லட்சம் பேர், அமெரிக்க கல்லுாரிகளில் கல்வி பயில அனுமதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பதற்றங்கள், சீன மாணவர்களின் கல்வியை பாதிக்காத வகையில், அவர்களின் கல்விக்கு அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த கொள்கை மாற்றத்துக்கு, எம்.ஏ.ஜி.ஏ., இயக்க ஆதரவாளர்கள் மற்றும் அவருடைய குடியரசு கட்சியின் மூத்த தலைவர்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர்கள் டிரம்பின் இம்முடிவை, அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற கொள்கைக்கான துரோகமாக கருதுகின்றனர். அமெரிக்க மாணவர்களுக்கான வாய்ப்புகளை சீன மாணவர்கள் பறிப்பர் என்றும் கவலை தெரிவித்துள்ளனர். சீன மாணவர்களில் சிலர் சீன உளவாளிகளாக இருக்கலாம் எனவும் அவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !