விளம்பரத்தால் தடைபட்ட அமெரிக்கா - கனடா வர்த்தக பேச்சு
வாஷிங்டன்: அமெரிக்க வரி விதிப்பை விமர்சித்து கனடாவில் ஒளிபரப்பப்பட்ட, 'டிவி' விளம்பரத்தையடுத்து, கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுகளும் உடனடியாக முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். வட அமெரிக்க நாடான கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல் பொருட்களுக்கு, அமெரிக்கா ஏற்கனவே அதிக வரிகளை விதித்துள்ளது. இந்நிலையில், கனடாவின் பெரிய மாகாணங்களில் ஒன்றான ஒன்டாரியோ மாகாணம் அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால், கனடாவிற்கு ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து அமெரிக்க மக்களுக்கு எடுத்துச் சொல்கின்ற வகையில், 'டிவி' விளம்பரத்தை வெளியிட்டது. கிட்டத்தட்ட, 60 வினாடிகள் ஓடும் இந்த விளம்பரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன், கடந்த 1987ம் ஆண்டு அந்நாட்டு தேசிய வானொலியில் பேசிய உரைகளில் இருந்து சில பகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரொனால்டு ரீகன் அறக்கட்டளை, தங்களிடம் உரிய அனுமதி பெறாமலும், ரீகனின் நிலைப்பாட்டை தவறாக சித்தரிக்கும் வகையிலும் அந்த விளம்பரம் இருந்ததாக குற்றஞ்சாட்டியிருந்தது. மேலும், இதுகுறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை: கனடா மோசமான மற்றும் போலியான விளம்பரத்தை பயன்படுத்தியுள்ளது. இந்த விளம்பரத்தின் நோக்கம், அமெரிக்க வரிகளின் சட்டப்பூர்வ தன்மை குறித்த அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முடிவுகளில் தலையிடுவதாகும். அமெரிக்காவின் வரி விதிப்பு என்பது, தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமானது. அவர்களின் மோசமான நடத்தையின் காரணமாக, கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சுக்களும் இதன் வாயிலாக நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.