| ADDED : ஜன 22, 2026 12:41 AM
டமாஸ்கஸ்: சிரியாவில் செயல்பட்டு வரும் ஆயுதக் குழுவான, எஸ்.டி.எப்., எனப்படும் சிரியா ஜனநாயக படைக்கு வழங்கி வந்த ஆதரவை நிறுத்துவதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது. மேற்காசிய நாடான சிரியாவில், குர்து பழங்குடியினத்தவரின் ஆயுதக் குழுவான எஸ்.டி.எப்., படை, ஐ.எஸ்., பயங்கரவாதிகளை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றியது. இதனால், எஸ்.டி.எப்., படைக்கு அமெரிக்கா, ராணுவ ஆதரவை வழங்கியது. கடந்த, 2024ல் அதிபர் பஷால் அல் அசாத் ஆட்சி கவிழ்ந்த பின், அகமது அல் ஷரா, அதிபரானார். இவருக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. எஸ்.டி.எப்., கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில், சிரிய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே நடந்த அமைதி பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது. ஆயுதக் குழுவை, ராணுவத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஒப்பந்தத்தை மீறி, மோதல் நடப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எஸ்.டி.எப்., குழுவுக்கான ஆதரவை நிறுத்துவதாக அமெரிக்கா கூறியுள்ளது.