பயங்கரவாதிகளை சிறப்பாக ஒடுக்குகிறது: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நற்சான்று
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தங்கள் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதில் சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்கா நற்சான்று வழங்கியுள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக பாகிஸ்தான் - அமெரிக்கா பிரதிநிதிகள் இடையே இரு தரப்பு பேச்சு நேற்று முன்தினம் இஸ்லாமாபாதில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தைக்கு ஐ.நா.,வுக்கான பாகிஸ்தான் சிறப்பு செயலர் நபீல் முனீர் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை பிரிவின் ஒருங்கிணைப் பாளர் ஜார்ஜ் லோஜெர்போ தலைமை தாங்கினர். பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தை அமெரிக்கா சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அங்கீகரித்த நிலையில் இந்த கூட்டம் நடந்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கை: பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் எதிர்க்க இரு நாடுகளும் உறுதியுடன் உள்ளன. பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், ஐ.எஸ்.ஐ.எஸ்., கோராசன் மற்றும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பயனுள்ள வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டியது முக்கியம். பாகிஸ்தான் -- அமெரிக்கா இடையே நீண்ட கால உறவு உள்ளது. பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் திட்டமிட்ட பேச்சுக்கள் மிக முக்கியமானது என்பதை இரு தரப்பிலும் வலியுறுத்தினோம். உலகின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் தொடர் வெற்றியடைந்திருப்பதை அமெரிக்கா பாராட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 50 பயங்கரவாதிகள் பலி ஆப்கானிஸ்தான் எல்லையோரம் உள்ள பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், ஜோப் மாவட்டத்தில் ஆகஸ்ட் 7 முதல் 11 வரை நான்கு நாட்கள் நடந்த அந்நாட்டு ராணுவத்தின் நடவடிக்கையில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் தெஹ்ரிக் -- இ - -தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.